வாழ்வியல் செய்தியில் மட்டும்
பல பரிமாணங்களில் நடனக் கலை... மேடையேறும் வாழ்க்கையின் பிம்பங்கள்... மறைந்த மூத்த நடனக் கலைஞரின் அழியாக் கதை

(படம்: National Heritage Board)
கலை என்பது மனித வாழ்வின் பிம்பத்தைக் காட்டும் கண்ணாடியைப் போன்றது. கலையைப் படைப்பவர்கள் உயிரின் கதைகளைப் பல பரிமாணங்களில் பிரதிபலிக்கின்றனர்.
நடனக் கலையில் எண்ணற்ற படைப்புகளை மேடையேற்றியதோடு, அதனை வளர்க்கப் பல்வேறு முயற்சிகளில் தம் வாழ்நாள் முழுவதுமாய் ஈடுபட்ட முன்னோடிக் கலைஞர், மறைந்த திருமதி சாந்தா பாஸ்கரிடம் 'செய்தி' பேசத் திட்டமிட்டிருந்தது.
பாஸ்கர் கலைப் பள்ளியின் 70ஆவது ஆண்டுநிறைவை முன்னிட்டு அவருடன் இடம்பெறவிருந்த எழுத்து-நேர்காணல் இடம்பெற முடியாத நிலையில் திருமதி சாந்தாவின் மகளான திருவாட்டி மீனாட்சி பாஸ்கர் 'செய்தி'யுடன் பேசினார். பாஸ்கர் கலைப்பள்ளியின் கலை இயக்குநராகத் திருவாட்டி மீனாட்சி பணியாற்றுகிறார்.
பாஸ்கர் கலைப்பள்ளியின் படைப்புகளில் பல்லின அம்சங்கள் நிறைந்திருப்பது எவ்வாறு உறுதிசெய்யப்படுகிறது?
இந்திய நடனங்களுடன் மற்ற நடன வகைகளையும் கற்றுக்கொள்ள மாணவர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
பரதநாட்டியத்தை அடிப்படையாகக் கொண்டு மற்ற கலாசாரங்களின் நடனங்களில் இருக்கும் அழகிய அம்சங்களைத் தமது நடன அமைப்புகளில் சேர்த்துக்கொண்டதன் மூலம் திருமதி பாஸ்கர் அவரது நடன அமைப்புகளுக்குத் தனித்தன்மையையும் சிறப்பையும் சேர்த்தார்.
பாஸ்கர் கலைப்பள்ளியின் இவ்வாண்டுக்கான சில திட்டங்கள்?
- 70ஆம் ஆண்டுநிறைவை முன்னிட்டு இவ்வாண்டு பல திட்டங்கள் தீட்டப்பட்டன
- Yantra Mantra: சிங்கப்பூர் அனைத்துலகக் கலைகளுக்கான விழா 2022
- மரபு 3: கலா உற்சவம்
- சில வெளிநாட்டு நிகழ்ச்சிகள்
- பிரசாந்தம் தொடர்
- ஆண்டுதோறும் இடம்பெறும் பாஸ்கரீயம் நிகழ்ச்சி

கலைகளை இளைய தலைமுறையினர் கற்றுக்கொள்ள ஊக்குவிப்பது எப்படி?
திருமதி பாஸ்கர் கலைகளை அனைவருக்கும் எட்டும் தூரத்தில் வைக்க முனைந்தார். அவர் பல பரிமாணங்களில் அதற்கு அரும்பாடுபட்டுப் பணியாற்றினார்.
இளையர்களுக்கு அவர்களது கலாசாரத்தைப் பற்றிச் சிறுவயதிலேயே கற்பிப்பதை அவர் என்றும் ஊக்குவித்தார்.
அவர்களுக்கு வரலாறு தெரிந்தால்தான் அதன் மீதான தாக்கம், ஈர்ப்பு, விருப்பம் ஏற்படும் என்பதை அவர் உறுதியாக நம்பினார்.
பாரம்பரியக் கலைப்படைப்புகளில் புதுமையைப் புகுத்தி இளையர்களைக் கலையின்பால் ஈர்த்தார் திருமதி பாஸ்கர்.
பாரம்பரியம், கலாசாரம், கலை - இவை மூன்றும் ஒரு மனிதனின் கை ரேகையைப் போன்றது. அவரவரின் தனிப்பட்ட அடையாளத்தைச் சமூகத்துடன் சேர்ப்பவையாக அம்மூன்றும் அமைகின்றன... இதனை வெளிப்படுத்திய திருமதி பாஸ்கரின் வாழ்க்கைப் பயணமும் கலைப்பணியும் சமூகத்தில் அழியாத இடத்தைப் பெற்றுள்ளன.