வாழ்வியல் trending
பெட்ரோல் குடித்து வளர்ந்த பிள்ளையோ? - இணையவாசிகள் ஆச்சரியம்
This audio is generated by an AI tool.
ஏழு வயதிலேயே தனது வேகத்தால் உலகைத் திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறார் சீனாவின் ஷாவ் ஜியான் (Shao Ziyan).
ஐந்து வயதில் அங்கீகரிக்கப்பட்ட நிபுணத்துவ ரேலி கார் (Rally Car) பந்தய வீரராக உருவெடுத்த அவருடைய பயணம் வியப்பிற்குரியது.
(விளக்கம்: ரேலி கார் என்பது கரடுமுரடான சாலைகள், மண், பனி, மணல் போன்ற பல்வேறு நிலப்பரப்புகளில் அதிவேகமாகச் செல்ல மாற்றியமைக்கப்பட்ட பந்தயக் கார்)
தொடங்கியது எப்படி?
ஒரு வயதில்: நடக்கப் பழகும்போதே சிமுலேட்டர் (Simulator) மூலம் காரோட்டப் பழகினார்.
இரண்டு வயதில்: மின்சார கோ-கார்ட் (Go-kart) போதவில்லை என்று எரிபொருள் காரை ஓட்டத் தொடங்கினார்.
நான்கு வயதில்: சிமுலேட்டர் விளையாட்டில் உலகத் தரவரிசையில் 30-வது இடத்தைப் பிடித்து அசத்தினார்.
அண்மையில் ஒரு தேசிய ரேலி பந்தயத்தில் வெற்றிபெற்று உலகின் ஆக இளம் வெற்றியாளர் என்ற பெருமையை ஷாவ் பெற்றார்.
ஷாவ் உலகத்தரம் வாய்ந்த பந்தய வீரர்களின் காணொளிகளைப் பார்த்து நுணுக்கங்களைக் கற்றார் என்று South China Morning Post நாளேடு குறிப்பிட்டது.
ஷாவ் ஜியானின் தந்தை ஒரு சாதாரண புகைப்படக் கலைஞர்.
சேமிப்பு, சமூக ஊடகங்கள் மூலம் கிடைத்த வருமானத்தைக் கொண்டு சுமார் 200,000 யுவான் (சுமார் 37,151 சிங்கப்பூர் வெள்ளி) செலவில் தனது மகனுக்காகச் சிறப்பாக சுஸுகி ஸ்விஃப்ட் (Suzuki Swift) காரை வடிவமைத்தார்.
உலக ரேலி போட்டிகள் (WRC) தொடரில் சீனாவிற்கு முதல் வெற்றியைப் பெற்றுத் தருவதே ஷாவின் கனவு.
அவரது அசாத்திய திறமையைக் கண்டு இணையவாசிகள் "இவன் பெட்ரோலைக் குடித்து வளர்ந்தானோ?" என்று வியந்து பாராட்டுகின்றனர்.