சக மாணவர்களின் குரலைக் கேட்டு நினைவிழந்த நிலையிலிருந்து மீண்ட சிறுவன்
Unsplash
மத்தியச் சீனாவில் நினைவிழந்த (coma) நிலையில் இருந்த சிறுவனுக்கு 55 நாள்களுக்குப் பிறகு நினைவு திரும்பியது.
அவனுக்கு வயது 8.
நினைவு எப்படித் திரும்பியது?
தம்முடன் படிக்கும் சக மாணவர்களின் உருக்கமான பதிவுகளைக் கேட்டபிறகு அவனுக்கு நினைவு திரும்பியது.
ஹுனான் (Hunan) மாநிலத்தில் பயிலும் லியு சுஸி (Liu Chuxi) சென்ற ஆண்டு நவம்பர் மாதம் கார் விபத்தில் சிக்கினான்.
அதன் பிறகு அவன் நினைவிழந்த நிலைக்குப் போனான்.
அவனுடைய மூளையில் பெரும் சேதம் ஏற்பட்டிருந்தது.
லியு சுயநினைவை மீண்டும் பெறும் வாய்ப்புக் குறைவு என்று மருத்துவர்கள் கூறியதாக South China Morning Post ஊடகம் தெரிவித்தது.
ஆனால் அவனுடைய தாயார் நம்பிக்கையை இழக்கவில்லை.
பல மருத்துவமனைகளுக்குச் சிகிச்சைக்காக அவனைக் கொண்டு சென்றார்.
பழக்கப்பட்ட இசை அல்லது ஒலி சிறுவனின் மூளையை இயங்கச் செய்யலாம் என்று மருத்துவர் ஒருவர் குறிப்பிட்டார்.
சிறுவனின் பள்ளியில் ஒலிபரப்பாகும் இசைத் துணுக்குகளை அவர் சேகரித்தார்.
அதை அன்றாடம் அவர் லியுவைக் கேட்க வைப்பார்.
லியுவின் ஆசிரியர் அவனுடைய சக மாணவர்களைப் பேசச் சொல்லிக் காணொளி ஒன்றைத் தயார் செய்தார்.
"சீக்கிரம் எழுந்திரு சுஸி, நாம் ஒன்றாகக் காற்பந்து விளையாடலாம்",
"எங்கள் குரலைக் கேட்டால், கண்களைத் திறந்திடு"
உள்ளிட்ட பதிவுகள் அந்தக் காணொளியில் இடம்பெற்றன.
அதையெல்லாம் அவருடைய தாயார் லியுவிற்கு ஒலிபரப்பினார்.
45 நாள்களுக்குப் பிறகு லியுவின் கண்ணிமைகளில் அசைவு தெரிந்தது.
சில நாள்களுக்குப் பிறகு ஆசிரியரின் குரலைக் கேட்டு அவன் சிரித்தான்.
55ஆவது நாளில் அவனுக்குச் சுயநினைவு திரும்பியது.