இதயத்தைக் காக்கும் மௌன நடைபயிற்சி
This audio is generated by an AI tool.
எந்தவொரு பாடலோ அலைபேசி உரையாடல்களோ இன்றி அமைதியாக நடக்கும் "மௌன நடை" (Silent Walking) தற்போது உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது.
இது ஒன்றும் புதிய முறையல்ல...
பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பௌத்தத் துறவிகள் இதனை "நகரும் தியானம்" (moving meditation) என்று அழைத்து வந்தனர்.
அண்மையில், மேடி மாயோ (Mady Maio) எனும் இளம்பெண் தினமும் கடினமான உடற்பயிற்சிகளுக்குப் பதிலாக 30 நிமிடம் முழு மூச்சாக நடக்கத் தொடங்கினார்.
தனது ஊட்டச்சத்து நிபுணரின் பரிந்துரைப்படி அவர் அதைச் செய்தார்.
பிறகு பாடல்கள் எதையும் கேட்காமல் நடக்கும்படி அவருடைய காதலர் அவருக்குச் சவால் விடுத்தார்.
முதலில் கடினமாகத்தான் இருந்தது.
போகப் போக அதுவே நன்மையாக மாறியதாக அவர் சொன்னார்.
இதய நிபுணரான மருத்துவர் மிட்செல் வெயின்பெர்க் (Mitchell Weinberg) இந்த நடைபயிற்சியால் ஏற்படும் சில நன்மைகள் பற்றி New York Post நாளேட்டிடம் கூறினார்.
❤️ மன அழுத்தம் குறையும்
❤️ ரத்த அழுத்தம் சீராகும்
❤️ மனம் தெளிவாக இருக்கும்
❤️ செரிமானத்தை மேம்படுத்தும்
❤️ ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும்
இவற்றுக்கும் மேலாக, இரைச்சல் இல்லாத அந்தச் சிறுபொழுது நம்முடைய அன்றாட இலக்குகளைப் பற்றிச் சிந்திக்கவும், நம்மை நாமே உணரவும் ஒரு நல்வாய்ப்பாக அமையும் என்றார் அவர்.
"சிறந்த நடைபயிற்சி என்பது சரியான பாடல்களைக் கேட்டு நடப்பதிலோ அமைதியாக நடப்பதிலோ அல்ல; நாம் தவறாமல் நடக்கிறோம் என்பதில்தான் இருக்கிறது" என்றார் வெயின்பெர்க்.