உலகக் கிண்ணக் காற்பந்து: புகழ்பெற்ற ஜெர்சிகள்
படம்: REUTERS/Toby Melville
காற்பந்து விளையாட்டில் அணி, ஆட்டக்காரர்களைத் தவிர்த்து ரசிகர்கள் அதிகம் விரும்புவது ஜெர்சிகளைத்தான் (jersey).
ஜெர்சிகள் வெறும் ஆடை அல்ல; தனி அடையாளம்.
சில ஜெர்சிகள் உலகப் புகழ்பெற்றவை;
இன்னும் சில விமர்சனங்களைக் கடந்து வந்தவை.
தகவல்களைத் திரட்டியது 'செய்தி'.
1. நைஜீரியா (Nigeria)
⚽ 2018இல் நைஜீரிய அணி ஜெர்சியை நைக்கி (Nike) தயாரித்தது.
⚽ கழுகின் சிறகு போன்ற வடிவமைப்பு, பளிச்சென்ற பச்சை நிறம் ரசிகர்களைக் கவர்ந்தது.
⚽ விற்பனைக்கு வரும்முன்னரே 3 மில்லியன் ஜெர்சிகள் முன்பதிவு செய்யப்பட்டன.
⚽ இணையத்தில் விற்பனைக்கு வந்ததும் மூன்றே நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன.
⚽ உலகக் கிண்ண வரலாற்றில் அமோக வரவேற்பைப் பெற்ற ஜெர்சியாக அது திகழ்கிறது.
2. அர்ஜென்ட்டினா (Argentina)
⚽ 1986இல் உலகக் கிண்ணக் காலிறுதி ஆட்டத்தில் மறைந்த காற்பந்து ஜாம்பவான் டியேகோ மரடோனா (Diego Maradona) அணிந்த ஜெர்சி உலகப் புகழ்பெற்றது.
⚽ மரடோனா போட்ட 'Hand of God' கோல் அதற்குக் காரணம்.
'Hand of God'
⚽ அப்போது மரடோனா அணிந்த ஜெர்சி 2022இல் பிரிட்டனில் ஏலம் விடப்பட்டது.
⚽ 7,142,500 பவுண்டுக்கு (சுமார் 12.2 மில்லியன் வெள்ளி) விற்பனையானது.
⚽ ஆக அதிக விலைக்கு விற்கப்பட்ட ஜெர்சியாக அது விளங்குகிறது.
3. மேற்கு ஜெர்மனி (West Germany)
⚽ 1990இல் மேற்கு ஜெர்மனி அணியின் ஜெர்சி காற்பந்து உலகில் புரட்சியை ஏற்படுத்தியது.
3 காரணங்கள்:
1. ஜெர்சிகள் ஒரே ஒரு வண்ணத்தில் சாதாரணமாக இருந்தன. அடிடாஸ் (Adidas) நிறுவனம் முதன்முதலாக ஜெர்சியில் வண்ணங்களை 'Zigzag' வடிவில் உருவாக்கி மாற்றம் செய்தது.
2. வரலாற்றுச் சிறப்பு
1989 நவம்பரில் வரலாற்றுச் சிறப்புமிக்க பெர்லின் சுவர் (Berlin Wall) இடிக்கப்பட்ட சில மாதங்களிலேயே இந்த உலகக் கிண்ணப் போட்டி நடந்தது. இதனால் ஜெர்மனி மக்களின் புதிய நம்பிக்கையின் அடையாளமாக ஜெர்சி மாறியது.
3. இறுதி வெற்றி
மேற்கு ஜெர்மனி அணி, ரோமில் நடந்த இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என வீழ்த்தி 3ஆவது உலகக் கிண்ணத்தை வென்றது. அந்த வெற்றி ஜெர்சியை அழியாத விளையாட்டுச் சின்னமாக மாற்றியது.
4. டென்மார்க் (Denmark)
⚽ 2022 உலகக் கிண்ணப் போட்டி கத்தாரில் (Qatar) நடந்தது.
⚽ கத்தாரில் நிலவிய மனித உரிமை மீறல் சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க டென்மார்க் அணி ஜெர்சி வண்ணங்களை மாற்றியது.
⚽ வெள்ளை, சிவப்பு, கருப்பு மட்டுமே பயன்படுத்தப்பட்டது.
⚽ உலகக் கிண்ணக் கட்டுமான வேலைகளின்போது உயிரிழந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அஞ்சலி செலுத்த கருப்பு நிறம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
⚽ அது துக்கத்தின் நிறமாக (Color of mourning) கருதப்பட்டது.
⚽ டென்மார்க் அணி சின்னமும் மங்கலாக மாற்றப்பட்டது.
5. ஸ்பெயின் (Spain)
⚽ 2018இல் ரஷ்யாவில் நடந்த உலகக் கிண்ணப் போட்டியின் போது ஸ்பெயின் அறிமுகப்படுத்திய ஜெர்சி சர்ச்சையைக் கிளப்பியது.
⚽ நிறங்களில் குழப்பம்; ஜெர்சியில் சிவப்பு, மஞ்சள், நீல நிறங்கள் இருந்தன. தூரத்திலிருந்து பார்த்தால் நீல நிறம் ஊதா நிறம் போலத் தெரியும்.
⚽ உள்நாட்டுப் போரை நினைவூட்டும் அந்த ஊதா நிறம், ஸ்பெயினின் தற்போதைய மன்னராட்சிக்கு எதிரான ஓர் அரசியல் அடையாளமாகக் கருதப்பட்டது.
⚽ அதனால் அது திட்டமிட்ட அரசியல் சதி என்று கூறி பல ரசிகர்கள் அந்த ஜெர்சியை எதிர்த்தனர்.
⚽ சர்ச்சைகள் எழுந்த போதிலும், ஜெர்சியில் மாற்றம் செய்யப்படவில்லை.
⚽ காலப்போக்கில் சர்ச்சை தானாகத் தணிந்தது.