Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல் செய்தியில் மட்டும்

"ஐயோ பாவமே என்று சொல்லாமல் உடற்குறையுள்ள எங்களைப் புரிந்து மதித்து நடந்துகொள்ளும் சமூகத்தை உருவாக்க விரும்புகிறேன்"

வாசிப்புநேரம் -

உடற்குறையுள்ள நண்பரிடம் "வா, வெளியே சென்று உணவு உண்போம்" என்று சொல்லிப் பாருங்களேன்...

செல்லும் இடத்தில் சக்கர நாற்காலிக்கான நுழைவு இருக்குமா, அமர்வதற்கு இடம் இருக்குமா - என்பன உடற்குறையுள்ளவரிடம் எழும் பல சிந்தனைகளில் ஒரு சில தான்

என்கிறார் திரு ரிச்சர்ட் குப்புசாமி. 

richard

மக்களிடையே உடற்குறையுள்ளவர்களைப் பற்றிய விழிப்புணர்வும் புரிந்துணர்வும் இருப்பது அவசியம் என்று அவர் எடுத்துரைத்தார். 

உடற்குறையுள்ளோரின் சாதனைகளை அங்கீகரிக்கும் Goh Chok Tong Enable விருதின் இவ்வாண்டுக்கான நியமனங்களை வரும் ஜூலை 15ஆம் தேதிவரை அனுப்பிவைக்கலாம். 

சென்ற ஆண்டின் Goh Chok Tong Enable விருதைப் பெற்ற திரு ரிச்சர்டைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள முனைந்தது 'செய்தி'.

உடற்குறையுள்ளவராக இருக்கும்போது, 'நம்மை அனைவரும் பாவம் பார்க்கவேண்டும், நமக்கு உதவி புரியவேண்டும்' என்ற மனப்பக்குவத்தைத் தவிர்க்கவேண்டும்

என்னால் இயன்றதைச் சரிவரச் செய்கிறேன்... மேலும் மேம்பட முனைகிறேன். தொடர்ந்து சமூகத்துக்கு உதவியாய் இருக்க விரும்புகிறேன் என்ற எண்ணமே என் மனத்தில் எப்போதும் இருக்கும் 

என்று சொல்கிறார் திரு ரிச்சர்ட். 

richard

கட்டட வடிவமைப்பாளராகப் பணியாற்றும் அவர், தாம் வடிவமைக்கும் கட்டடங்களில் உடற்குறையுள்ளவர்களுக்குத் தேவையான சில அம்சங்களை முடிந்த அளவில் சேர்த்துக்கொள்ள முயல்வதாகச் சொன்னார். 

நிறுவனத்தின் நிர்வாகி, உடற்குறையுள்ளோர் அமைப்பின் தலைவர் என்று பல்வேறு தலைமைத்துவப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு செயல்படும் திரு ரிச்சர்ட் அந்த நிலையை எப்படி அடைந்தார் என்று கேட்டபோது...

உடற்குறை உள்ளவர் சாதிப்பதை, இயல்பாக இருப்பவர்கள் அதிசயமாகப் பார்க்கின்றனர்... அந்த மனப்போக்கு மாறவேண்டும் என்றார் திரு ரிச்சர்ட். 

richard

உடற்குறையுள்ளவர்களுக்குச் சமமான கல்வி, வேலை வாய்ப்புகளை அமைத்துக்கொடுப்பது மிகவும் முக்கியம்

நான் ஒரு விதத்தில் அதிர்ஷ்டசாலி தான்... என் பெற்றோர் எனக்குப் பக்கபலமாக இருந்தார்கள்

என்று குறிப்பிட்ட அவர், அவர்களது கடின உழைப்பால் தமக்குப் பொதுப் பள்ளிகளிலும் வெளிநாட்டிலும் கல்வி பயில வாய்ப்பு கிட்டியதைப் பகிர்ந்தார். 

அந்த அனுபவங்களின் மூலம் அவரது சிந்தனையாற்றல் விரிவடைந்ததாக அவர் கூறினார். அவருக்குக் கிடைத்த அனுபவங்களும் வாய்ப்புகளும் அவரைப் போல இருக்கும் மற்ற உடற்குறையுள்ளவர்களுக்கும் கிடைக்கவேண்டும் என்ற சிந்தனையே அவரது பல முயற்சிகளுக்கு அடித்தளமாக அமைந்தது. 

richard
உடற்குறையுள்ளோரைப் பிறர் புரிந்துகொள்ளாமல் நடந்துகொண்டாலோ, ஒதுக்கினாலோ...

எனக்குக் கோபம் வரும் 

என்றார் அவர்... 

சமூகத்தில் பெண்களுக்குச் சம உரிமை; இனம், மொழி, மதம் என்ற வேற்றுமைகளை மறப்பது போன்ற சமத்துவக் கோட்பாடுகளைப் பின்பற்றும் மக்கள், உடற்குறையுள்ளவர்களைப் பற்றியும் சற்று யோசிக்கவேண்டும் என்று குறிப்பிடுகிறார் திரு ரிச்சர்ட்.

உடற்குறையுள்ளவர்களைப் புறக்கணிக்கும் போக்கு இன்னும் நம் சமூகத்தில் உள்ளது என்று சுட்டிய அவர், அந்த நிலை மாறவேண்டும் என்றும் உடற்குறையுள்ளவர்களை ஏற்றுக்கொள்ளும் சமூகம் முழுமையாக வளர்ச்சி அடைவதை நெருங்கும் என்றும் அவர் சொன்னார். 

Mediacorp Enable Fund (MEF) என்ற அறநிதி உடற்குறையுள்ளவர்களின் திறமைகளை அங்கீகரிக்கவும் அவர்கள் சமூகத்தில் முழுமையான வாழ்க்கை வாழவும் அமைக்கப்பட்டுள்ளது. 

MEF அறநிதியை SG Enable வழிநடத்துகிறது. அதன் அதிகாரத்துவ ஊடகப் பங்காளி நிறுவனம் மீடியாகார்ப்.   

MEF அறநிதிக்கு ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் தோங் (Goh Chok Tong) புரவலராக இருக்கிறார். MEF மூலம் உடற்குறையுள்ளவர்களுக்கு ஆதரவு வழங்க mef.sg இணையத்தளத்தை நாடலாம். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்