வாழ்வியல் exclusive
பிரபலமாகும் HIIT பயிற்சிகள் - பாதுகாப்பானவையா?
அண்மைக் காலத்தில் HIIT எனும் High Intensity Interval Training பயிற்சிகள் பிரபலமடைந்து வருகின்றன.
அண்மையில் அத்தகைய உடலுறுதிப் பயிற்சியில் ஈடுபட்ட 25 வயது தேசிய சேவையாளர் மாண்டதைத் தொடர்ந்து சிலரிடையே அதுபற்றி கவலை எழுந்துள்ளது.
நோய்ப்பரவலுக்கு முன்பிருந்ததைவிட இப்போது அத்தகைய உடலுறுதிப் பயிற்சிகளில் சேருவோர் எண்ணிக்கை 3 மடங்காகியிருப்பதாகச் சில உடற்பயிற்சிக் கூடங்கள் கூறுகின்றன.
இது இதயச் செயல்பாட்டை மேலும் விரைவாகத் தூண்ட குறுகிய நேரத்தில் மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சி என்கிறார் உடலுறுதிப் பயிற்றுவிப்பாளர், வானன் கோவிந்தசாமி.

இந்த HIIT பயிற்சியை 20 நிமிடங்களில் செய்து முடித்துவிடலாம்
அதனால் பலர் இந்த உடற்பயிற்சி வகுப்புகளுக்குப் போகிறார்கள்.
அந்த உடற்பயிற்சியின் தீவிரம் அதிகரிப்பதற்கான சாத்தியம் மிக அதிகம்;
இதயத் துடிப்பு 30-40 துடிப்புகள் வரையும் கூட அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.
ஆகையால், மருத்துவப் பரிசோதனையைச் செய்த பிறகு உடற்பயிற்சியில் ஈடுபடுவது நல்லது என்றார் திரு வானன்.
HIIT பயிற்சி பாதுகாப்பானதா?
ஒவ்வொருவரும் தங்கள் உடலின் ஆற்றலை அறிந்து உடற்பயிற்சியில் ஈடுபட்டால் அத்தகைய உடற்பயிற்சி பாதுகாப்பானதே என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்த HIIT பயிற்சியைச் செய்யும் முன், warm-up எனும் உடற்பயிற்சிக்கு முன்னர் செய்யக்கூடிய பயிற்சி மிக முக்கியம் என்றார் திரு வானன்.
அப்படிச் செய்யாமல் உடற்பயிற்சியில் ஈடுபட்டால், அதிக ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
உடற்பயிற்சி தீவிரமானதாக இருப்பதால், நமது தசைகளோ, எலும்புகளோ சேதமடைய அதிக வாய்ப்புள்ளது.
அதே வேளையில், உடற்பயிற்சிக்குப் பிறகு warm-down பயிற்சியில் ஈடுபடுவதும் அவசியம் என்பதைத் திரு வானன் வலியுறுத்தினார்.
இதயத் துடிப்பை மெதுவாகக் குறைப்பது நமது இதயத்துக்கும் நல்லது, நமது உடலுக்கும் நல்லது என்றார் அவர்.
உடல்வாகை நன்கு அறிந்து, உடற்பயிற்சியின் தீவிரத்தன்மையைப் படிப்படியாக அதிகரிப்பதே முறையான வழி என்பது மருத்துவர்கள், உடலுறுதிப் பயிற்றுவிப்பாளர்களின் ஆலோசனை.