வாழ்வியல் செய்தியில் மட்டும்
வீட்டில் சமைத்த உணவு, கடையில் வாங்கிய உணவு... எத்தனை நாள்கள் வரை வைத்துச் சாப்பிடலாம்?
சமைத்த உணவை குளிர்சாதனப் பெட்டியில் வைப்பது..
அடுத்த நாள் அதைச் சூடாக்கி உண்பது...
தினமும் சமைக்க நேரம் இல்லாத பலரும் இதைச் செய்வதுண்டு.
சில சமயம் கடையில் வாங்கிய உணவையும் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துச் சூடாக்கி உண்பது வழக்கமாகிவிட்டது.
அவ்வாறு செய்வதில் தவறில்லை. ஆனால் அது எப்போது சமைக்கப்பட்டது, எவ்வளவு நேரம் வெளியில் இருந்தது என்பது தெரியாது. அதனால் ஒரு முறைக்கு அதிகமாக அதைச் சூடாக்கிச் சாப்பிடக்கூடாது என்று 'செய்தி''யிடம் கூறினார் ஊட்டச்சத்து நிபுணர் பிரியங்கா.
வீட்டில் சமைத்த உணவைப் பெரும்பாலும் 3 முதல் 4 நாள்களுக்குக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்து உண்ணலாம் என்றார் பொது மருத்துவர் முகமது பைசல்.
சமைக்கப்பட்ட 2 மணி நேரத்துக்குள் குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால்தான் கிருமி வளர்வதைத் தவிர்க்கலாம் என்றும் அவர் கூறினார்.
கடல் உணவு, பால் வகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவு எளிதில் கெட்டுப்போய்விடலாம் என்றும் அவர் எச்சரித்தார்.
வீட்டில் சமைத்த உணவாக இருந்தாலும், அதை ஒரு முறைக்கு அதிகமாகச் சூடாக்கக்கூடாது என்றார் குமாரி பிரியங்கா.
பாதுகாப்பான தட்பநிலைகள்
- குளிர்சாதனப் பெட்டியின் தட்பநிலை பாதுகாப்பான அளவில் இருந்தால் உணவும் பாதுகாப்பாக இருக்கும் என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு சொல்கிறது.
- கிருமிகள் 5 முதல் 60 டிகிரி செல்சியஸில் அதிவேகமாக வளரும். அதனால் குளிர்சாதனப் பெட்டியில் தட்பநிலை 4 டிகிரி செல்ஸியஸுக்குக் குறைவாக இருப்பதை உறுதிசெய்யவேண்டும்.
- Freezer எனும் உறையவைக்கும் பகுதியில் தட்பநிலை உறைநிலைக்குக் கீழ் 18 டிகிரி செல்சியஸுக்குக் குறைவாக இருக்கவேண்டும்.
உணவுப் பாதுகாப்பு நடைமுறைகள்
- குளிர்சாதனப் பெட்டியில் வைக்கும் உணவைக் கொள்கலனில் வைக்கும்போது அது வைக்கப்படும் தேதியைக் குறிப்பிட்டால் எத்தனை நாள்களாக அது குளிர்சாதனப் பெட்டியில் இருக்கிறது என்பதை அறியலாம்.
- சமைத்த உணவை 2 மணி நேரத்துக்கும் அதிகமாக அறையின் தட்பநிலையில் வைப்பதைத் தவிர்க்கலாம்
- சில சமயம் உணவு குளிர்சாதனப் பெட்டியில் இருந்தாலும் அதன் மணமும், தோற்றமும் வித்தியாசமாகக் காணப்பட்டால் வீசிவிடவேண்டும்.
நீண்ட நாள் குளிர்சாதனப் பெட்டியில் இருக்கும் உணவை உண்டால் விளைவுகள்?
- நச்சுணவு
- வாந்தி
- வயிற்றுப்போக்கு
ஏற்படலாம்.
குறிப்பாக கர்ப்பிணிகள், வயதானவர்கள், குறைவான நோய் எதிர்ப்புச் சக்தி உடையவர்கள் பழைய உணவை உண்பதைத் தவிர்க்கவேண்டும் என்றார் டாக்டர் பைசல்.