வாழ்வியல் exclusive
பொழுது விடிந்தது வாழ்க்கை மாறியது! - தடைகளைத் தாண்டி சாதித்த 'அக்கா கடை' சங்கீதா
(படங்கள்: தயாளன் சண்முகம்)
கார் நிறுத்துமிடத்தில் ஒரே மக்கள் கூட்டம்...
ஏதோ விபத்து ஏற்பட்டிருக்குமோ என்று சிலர் நினைக்கலாம்.
அதுதான் இல்லை.
அது "அக்கா" என்று அனைவராலும் அழைக்கப்படும் சங்கீதாவின் 'நாசி லெம்மாவிற்காகக் காத்திருக்கும் கூட்டம்.
மலேசியாவில் சிலாங்கூரில் அமைந்திருக்கும் ஶ்ரீ கெம்பாங்கான் (Seri Kembangan) பகுதியில் அவரின் சிறிய கடை உள்ளது.
எல்லா இனத்தினரும் இவரின் நாசி லெம்மாவை ருசிக்க 5 மணிநேரத்திற்குமேல் காத்திருப்பது வியக்கச் செய்கிறது.
யார் இவர்? திடீரென சமூக ஊடகங்களில் எப்படிப் பிரபலமானார்.
ஒரே நாளில் அக்காவின் வாழ்க்கை தலைகீழாக மாறியது எப்படி?
நோன்புப் பெருநாள் காலக்கட்டத்தில் இஸ்லாமியர்கள் காலை நேரத்தில் உணவு வாங்குவது வழக்கம்.
அப்படி ஒருநாள் காலைப்பொழுதில், சங்கீதா அக்கா கடையின்முன் மிகப்பெரிய கூட்டம் அணிவகுத்து நிற்பதை ஒரு நபர் சமூக ஊடகத்தில் பகிர்ந்தார்.
அன்று தொடங்கி இன்றுவரை கூட்டம் குறையாமல் அவரது வியாபாரம் முன்னோக்கிச் செல்கின்றது.
"பல மணிநேரம் காத்துக் கிடக்கின்றோம். ஒரு நபருக்கு 10 பொட்டலங்களை வழங்காதீர்கள். எங்களைக் காத்திருக்க வைத்து ஏமாற்றாதீர்கள்" என்ற சர்ச்சைகள் எழுந்தாலும் சங்கீதாவின் வியாபாரம் தொடர்ந்து வளர்கிறது.
வாழ்க்கையில் இவ்வளவு பெரிய மாற்றத்தையும் ஏற்றத்தையும் சங்கீதா அக்கா இப்போது பார்த்தாலும் அவர் பல இன்னல்களைக் கடந்துவந்தவர்.
"கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5ஆம் தேதி, எனது கணவரும் 2 மகன்களும் விபத்துக்குள்ளாகினார்கள். அதில் மூத்த மகன் சிறிய காயங்களுடன் தப்பிய நிலையில், இளைய மகனுக்கு இடுப்பு எலும்பு உடைந்தது. அதோடு தோள் பட்டையில் உள்ள எலும்பு நகர்ந்துவிட்டதாக மருத்துவர் கூறினார்."
அதோடு தமது கணவருக்குத் தொடைப் பகுதியின் எலும்பு உடைந்து விட்டதாகவும் வீட்டின் ஒட்டு மொத்த பொறுப்புகளையும் தாம் ஒருத்தியே கவனிக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டதாகவும் சங்கீதா கூறினார்.
"என் இளைய மகன் முழுமையாகக் குணமடைந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டார். என் கணவர் இன்னமும் நடக்கமுடியாமல் இருக்கின்றார். இந்த நிலை மாறும்வரை தொடர்ந்து உழைக்கவேண்டும். இத்தருணத்தில் மக்கள் வழங்கிய ஆதரவு மகிழ்ச்சி தருகின்றது" என சங்கீதா குறிப்பிட்டார்.