Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

'அழுகுரல் எங்களைப் பதறவைத்தது'- மலேசிய வெள்ளத்தில் களத்தில் இறங்கி உதவும் வீரமங்கைகள்

"மக்களின் அழுகுரலைக் கேட்டவுடன்  வீட்டில் இருக்க முடியவில்லை. அது எங்களைப் பதறவைத்தது" என்று உணர்ச்சிவசப்படுகிறார் மலேசியாவின் தாமான் ஸ்ரீமுடா பகுதியிலிருக்கும் பவானி. 

வாசிப்புநேரம் -

மக்களின் அழுகுரலைக் கேட்டவுடன் வீட்டில் இருக்க முடியவில்லை. அது எங்களைப் பதறவைத்தது

என்று உணர்ச்சிவசப்படுகிறார் மலேசியாவின் தாமான் ஸ்ரீமுடா பகுதியிலிருக்கும் பவானி.

50 ஆண்டுகள் காணாத மோசமான வெள்ளப் பேரிடரால் மலேசியா அண்மையில் நிலைகுலைந்துபோனது.

அரசாங்க உதவியை மட்டுமே எதிர்பாராமல், களத்தில் இறங்கி சக மலேசியர்களுக்குக் கைகொடுக்கத் தொடங்கிய தொண்டூழியர்களில் ஒருவர் பவானி.

தலைநகர் கோலாலம்பூரிலிருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள தாமான் ஶ்ரீ மூடா பகுதி வெள்ளத்தில் மூழ்கியதை நம்மில் பலர் சமூக ஊடகங்களில் பார்த்திருப்போம்.

அங்கு களத்தில் இறங்கி இன்றுவரை உதவிக்கொண்டிருக்கும் 3 பெண்கள் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.

பேரிடர் காலத்தில் களத்தில் இறங்கி பணி செய்ய முடிந்தவர்கள் ஆண்கள் மட்டுமே என்ற கூற்று இவர்களால் பொய்த்துப்போனது.

டிசம்பர் 17 முதல் பெய்த இடைவிடா மழையின் காரணமாக ஶ்ரீ மூடா பகுதியில் வசிக்கும் 4,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டன.
பலரது வீடுகள் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கிப் போயின.

இதைச் சமூக வலைத்தளங்களில் பார்த்தவுடன் பதறித் துடித்ததாகக் கூறுகிறார் பவானி.

உடனடியாக ஶ்ரீ மூடா பகுதிக்கு விரைந்தேன். அதற்குள் அனைத்து வீடுகளும் மூழ்கி விட்டன. மக்களுக்கு உதவ வேண்டுமென, சமூகத் தளத்தில் ஒரு காணொளியைப் பதிவேற்றம் செய்தேன்.

மறுநாள் காலை தொலைத்தொடர்புச் சேவை, மின்சாரச் சேவை துண்டிக்கப்பட்டது. பலர் காணாமல் போய்விட்டதாகத் தகவல் வந்து கொண்டே இருந்தது. உடனடியாக அவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டேன்.

காணாமல் போன 30 பேரை மீட்டதில் மிகுந்த மகிழ்ச்சி. இருப்பினும் சிலரது மரணம் எங்களை உலுக்கிவிட்டது.

என்றார் பவானி.

இதனிடையே மக்களுக்கு உதவ வேண்டுமென டிக் டாக் செயலியில் பிரபலமாக இருப்பவர்களை அழைத்துக் கொண்டு களத்தில் இறங்கினார், 2017ஆம் ஆண்டு மலேசிய அழகிப் போட்டியில் வென்ற சுபாஷினி.

இந்த வெள்ளத்தில் அடிப்படை உடைமைகளை இழந்தவர்களுக்காக மின்பொருட்களை வழங்கும் சேவையில் ஈடுபட்டு வருகிறார் வழக்கறிஞர் உஷா வீரசேனன்.

நேரடியாகக் களத்தில் உதவ முடியாதவர்கள் மக்களுக்குப் பணம் கொடுக்கிறார்கள். ஒருபுறம், அவர்களுக்குத் தொடர்ந்து உணவு வழங்கப்படுகிறது. அதனால் மின் பொருட்களை வழங்க முடிவு செய்தோம்.

சமைப்பதற்கான அடிப்படைப் பொருட்களை வழங்கும் நடவடிக்கைகள் தொடர்கின்றன. ஆனால் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்கள்

என்கிறார் உஷா.

அரசாங்கத்தின் உதவிகள் கிடைப்பதில் கால தாமதம் ஏற்பட்டதாகப் பலர் குறைபட்டுக்கொள்கின்றனர்.

அதனால் பாதிக்கப்பட்டவர்கள் மக்கள் உதவியைப் பெரிதும் எதிர்பார்த்திருக்கின்றனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்