உணவு விநியோகத்தில் கிடைக்கும் பணத்தை நன்கொடையாகக் கொடுக்கும் ஆடவர்
ஒரு நாளில் செய்யவேண்டிய வேலை அனைத்தும் முடித்துவிட்டால்...
எஞ்சிய நேரத்தில் ஓய்வெடுக்கலாம்...பொழுதுபோக்கு நடவடிக்கையில் ஈடுபடலாம்...
பிரான்ஸைச் சேர்ந்த 43 வயது திரு யான் ஐட்பச்சிர் (Yann AitBachir) பகுதி நேர வேலைக்குச் செல்கிறார்...அதில் கிடைக்கும் பணம் அனைத்தையும் நன்கொடையாகக் கொடுத்துவிடுகிறார்.
2009ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூரில் வாழும் அவர் Grab நிறுவனத்தில் பகுதி நேரமாக விநியோகம் செய்கிறார்.
வாரநாள்களில் வேலை முடிந்து கிடைக்கும் சிறிது நேரமாக இருந்தாலும் சரி..வாரயிறுதிகளில் கிடைக்கும் ஓய்வு நேரமாக இருந்தாலும் சரி...திரு ஐட்பச்சிர் உணவு விநியோகிக்கச் சென்றுவிடுவார்.
வாரத்துக்கு 10 மணி நேரம்..
அவ்வாறு கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் ஆண்டிறுதி வரை சுமார் 7,000 வெள்ளி சம்பாதித்தார் திரு ஐட்பச்சிர்.
சுற்றுப்புறத்தைப் பாதுகாக்கவும் வறுமையை ஒழிக்கவும் முனையும் அமைப்புகளுக்கு அவர் பணத்தைக் கொடுத்துவிட்டார்.
உணவு விநியோகம் செய்வதால் பணத்தின் அருமையை உணரமுடிவதாகத் திரு ஐட்பச்சிர் சொன்னார்.
"அதிகச் சம்பளம் கிடைக்கும்போது பணத்தை இறைப்பது எளிது. 20, 25 வெள்ளி சம்பாதிப்பதற்கு உழைக்கும் நிலை ஏற்படும்போதுதான் பணத்தின் அருமையை அறியமுடிகிறது," என்று அவர் சொன்னார்.
திரு ஐட்பச்சிர் உழைப்பை நிறுத்த விரும்பவில்லை.
உணவு விநியோகம் செய்துகொண்டே இவ்வாண்டு 10,000 வெள்ளி சம்பாதிக்க அவர் எண்ணுகிறார்.
அதையும் நன்கொடையாக அளிக்கத் திரு ஐட்பச்சிர் முடிவெடுத்துள்ளார்.