மறதிநோய்க்கு மருந்து தேடி ஒரு பயணம்: அயர்லந்தைச் சுற்றி ஓடும் அண்ணன்-தம்பி
படம்: Toby Shepheard / AFP
This audio is generated by an AI tool.
கடந்த வார இறுதியில் லண்டனில் நடந்த ஓர் ஓட்டம் பலரின் கவனத்தை ஈர்த்தது.
அதில் 25 கிலோ எடை கொண்ட குளிர்சாதனப் பெட்டியை முதுகில் தூக்கிக் கொண்டு ஓடினார் 30 வயது ஜோர்டன் ஆடம்ஸ் (Jordan Adams)!
இப்போது அவர் அயர்லந்து (Ireland) முழுவதும் ஓடுகிறார்....மறதிநோயைக் குணப்படுத்தும் மருந்தைத் தேடி!
அயர்லந்தின் 32 மாவட்டங்களை 32 நாட்களில் ஓடிக் கடக்கத் திட்டமிடுகிறார் ஆடம்ஸ். மே 28ஆம் தேதி அவர் டப்ளின் (Dublin) நகரத்தில் ஓட்டத்தை முடிப்பார்.
அவருக்கும் அவரது சகோதரருக்கும் மறதிநோய் (Dementia) ஏற்படும் அபாயம் உள்ளதாக அவர் சொல்கிறார்.
2010ஆம் ஆண்டு ஆடம்ஸின் தாய்க்கு முதுமை மறதிநோய் ஏற்பட்டது. ஆறு ஆண்டுகள் கழித்து அவர் மாண்டார்.
அப்போது ஆடம்ஸிற்கு 21 வயது, தம்பி சியானிற்கு (Cian) 15 வயது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன்-தம்பி இருவருக்கும் MAT-T எனும் மரபணு இருப்பது தெரியவந்தது.
அது மறதி நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.
மறதி நோயால் ஏற்கெனவே 12 குடும்ப உறுப்பினர்களை இழந்துவிட்டதாக ஆடம்ஸ் AFP செய்தி நிறுவனத்திடம் சொன்னார்.
குளிர்சாதனப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு ஓடியது புதுமையான அனுபவமாக இருந்ததாகக் கூறினார் ஆடம்ஸ்.
கடும் சவால்கள் அண்ணன்-தம்பிக்குப் புதிதல்ல. 2 ஆண்டுகளுக்கு முன்பே இருவரும் பிரிட்டனைச் சுற்றி ஓடினர்.
தாயின் நினைவாக 1 மில்லியன் பவுண்டு திரட்ட வேண்டும் என்ற லட்சியத்தை நிறைவேற்ற அவர்கள் விரும்புகின்றனர்.
அதில் 50 விழுக்காடு அயர்லந்தின் மறதிநோய் அறநிறுவனத்திற்கு வழங்கப்படும்.
இருவரின் முயற்சியில் பலரும் களமிறங்கி சேர்ந்து ஓடுகின்றனர்.