சமூக ஊடகங்களில் பிரபலமாகிவரும் Maxxing - மனப்போக்கு
படம்: RONALDO SCHEMIDT / AFP
This audio is generated by an AI tool.
சமூக ஊடகத்தில் ஆடை அணிகலன்கள், சுற்றுலாத் தலங்கள், அன்றாட நடவடிக்கைகள் எனப் பலவற்றைப் பலர் அன்றாடம் பகிர்வதுண்டு.
இப்போது உணவு, ஊட்டச்சத்து ஆகியவற்றிலும் சமூக ஊடகப் பிரபலங்கள் பலர் அதிகக் கவனம் செலுத்துகின்றனர்.
அத்தகைய பதிவுகளைப் பார்த்துப் பலரும் அவர்களைப் பின்பற்றவேண்டும் என்றும் எண்ணுகின்றனர்.
தற்போது சமூக ஊடகங்களில் அதிகம் பேசப்படும் ஒன்று "Maxxing".
அதாவது உடலுக்குச் சிறந்த ஊட்டச்சத்தை அடையாளம்கண்டு அதனை அதிக அளவில் உட்கொள்வது.
Gen Z, Millennials போன்ற தலைமுறைகளை அது அதிகமாகக் கவர்ந்திழுக்கிறது.
குறிப்பாக புரதம், நார்ச்சத்து மீதான ஆர்வத்தைத் தூண்டும் முயற்சியைப் பல சமூக ஊடகத்தினர் எடுத்துவருகின்றனர்.
இதன் தாக்கம் முன்னணி நிறுவனங்களின் விளம்பரங்களிலும் அதிகம் தெரிகிறது.
PepsiCo, Nestle போன்ற நிறுவனங்கள் அவற்றின் உணவு, பானப் பொருள்களில் அதிகப் புரதம், நார்ச்சத்து இருப்பதாய் விளம்பரப்படுத்துகின்றன.
எனினும் ஒரே மாதிரியான தீர்வு அனைவருக்கும் பொருந்தாது என்று சுகாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர் சமூக ஊடகத்தில் பதிவுசெய்யப்படும் அறிவுரைகளுக்குப் பெரும்பாலான வேளைகளில் அறிவியல் ஆதாரம் இருக்காது;
சுயமான ஆய்வால் எடுக்கப்படும் முடிவுகளால் உடலுக்கு ஆபத்து ஏற்படலாம் என்று அவர்கள் கூறினர்.
நார்ச்சத்தை வேகமாக உட்கொள்வதால் வயிற்றுப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நிலையான தொடர்முயற்சிகள் அவசியம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
உணவில் காய்கறிகள், பழங்கள், பருப்புவகைள் போன்றவற்றைச் சேர்த்துக்கொள்வது நல்லது.
சமூக ஊடகத்தில் பார்ப்பதையெல்லாம் கண்மூடித்தனமாக நம்பாமல் மருத்துவருடன் திட்டமிடுவது உடல்நலனைப் பாதுகாக்கக் கைகொடுக்கும்.