வாழ்வியல் செய்தியில் மட்டும்
மரணத்தை ஏற்படுத்திய puffer வகை மீன் - "சமைத்த பின்னும் நச்சுத்தன்மை இருக்கலாம்"

கடல் உணவுகள் உண்பதற்குப் பாதுகாப்பானவை என்றாலும் சில வகை சமைத்த உணவுகளில் நச்சுத்தன்மை இருக்கச் சாத்தியமுண்டு எனச் சிங்கப்பூர் உணவு அமைப்பு (SFA) கூறுகிறது.
எனவே அத்தகைய கடல் உணவுகளைச் சமைக்கும்போது சில முக்கிய அம்சங்களைக் கவனத்தில் கொள்வது அவசியம் என்றது அமைப்பு.
சரி, puffer மீன் என்றால் என்ன? அது ஏன் ஆபத்தானது? அதில் என்ன நச்சு இருக்கிறது?
தகவல்களைத் திரட்டியது 'செய்தி'.
Pufferfish, ஃபுகு (fugu) என்றும் அழைக்கப்படுகிறது. இது ஜப்பானில் மிகவும் புகழ்பெற்ற உணவு.
இந்த மீனில் டெட்ரோடோடாக்சின் (tetrodotoxin, TTX) என்னும் கொடிய நச்சு உள்ளது.
0.002 கிராம் அளவிலான நச்சு ஒரு மனிதனைக் கொல்லும் ஆபத்துக்கொண்டது என ஆணையத்தின் இணையத்தளம் குறிப்பிடுகிறது. அந்த நச்சுக்கு வண்ணம் இல்லை. வாடையும் இல்லை. சமைத்தாலும் அதன் நச்சு அழியாது.
அந்த நச்சு மனிதனின் நரம்பு மண்டலத்தைப் பாதித்து பக்கவாதத்தை ஏற்படுத்தும். மூச்சுத்திணறலை ஏற்படுத்தி மரணத்தை விளைவிக்கும். நச்சுத்தன்மையின் அளவைப் பொறுத்து இவையனைத்தும் பத்தே நிமிடங்களில்
நடந்துமுடியலாம் என ஆணையம் எச்சரித்துள்ளது.
சிங்கப்பூரில் puffer மீன் வகை உணவுகள் விற்கப்படுகின்றனவா?
சிங்கப்பூரில் கடுமையான கட்டுப்பாடுகளின்கீழ் puffer மீன் வகை உணவுகள் விற்கப்படுகின்றன.
இப்போதைக்கு அந்த மீனை ஜப்பானிலிருந்து மட்டுமே சிங்கப்பூருக்கு இறக்குமதி செய்ய அனுமதியுண்டு.
ஜப்பான் அரசாங்கத்தால் சான்றளிக்கப்பட்டு உரிமம் பெற்ற சமையல் நிபுணர்கள் மட்டுமே அந்த மீனைச் சமைக்க முடியும்.
சரியான முறையில் தயாரிக்கப்படாத puffer வகை மீன் உணவுகள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதையும் அமைப்பு வலியுறுத்தியது.
மேலும் விவரங்கள் பெற: https://www.sfa.gov.sg/food-information/risk-at-a-glance/pufferfish-101
இதற்கிடையே, மீனில் இயற்கையாகவே இருக்கும் நச்சுக்களைத் தவிர்த்து கடலிலுள்ள நச்சுத்தன்மை மிக்க நுண்பாசிகளாலும் உணவுகளை முறையாகக் கையாளத் தவறுவதாலும் கடல் உணவுகள் நச்சாக மாறுகின்றன.
கடல் உணவுகளைக் கையாளும் முறை....
கடல் உணவுகளை வாங்கும்போது:
- முறையாகக் குளிர்பதனப்படுத்தப்படிருப்பதை உறுதிப்படுத்துதல்
- காலாவதித் தேதியைச் சரிபார்த்தல்
- அமோனியா வாடை அதிகமுள்ள கடல் உணவை வாங்குவதைத் தவிர்த்தல்
- கடல் உணவுகளை வாங்கிய கையோடு வீட்டிற்குச் சென்று குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவேண்டும்
குளிர்சாதனப் பெட்டியில் வைக்கும்போது.....
- அளவுக்குமீறிய கையிருப்பைத் தவிர்க்கவும்
- சமையல் தேவைக்கு ஏற்ப அவற்றைப் பிரித்து வைக்கலாம்