காலையில் குளிப்பதா, வேண்டாமா? இணையத்தில் சூடான விவாதம்

படம்: Unsplash/Hannah Xu
சிங்கப்பூர் இணையவாசிகளிடையே ஒரு சுவாரஸ்யமான விவாதம் எழுந்துள்ளது.
காலையில் குளிப்பதா, வேண்டாமா?
Tiktok தளத்தில் கடந்த மாத இறுதியில் பதிவான காணொளியில் ஒருவர் சிங்கப்பூரர்களைக் காலையில் குளித்துவிட்டு வெளியே செல்லும்படி கேட்டுக்கொண்டார்.
பொதுப் போக்குவரத்தில் சிலர் குளிக்காமல் இருப்பதால் துர்நாற்றம் வீசுவதாகவும் அவர் கூறினார்.
260,000க்கும் அதிகமான முறை பார்க்கப்பட்ட அந்தக் காணொளிக்குப் பலர் ஆதரவளித்தனர்.
அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ஒருவரின் காணொளி இணையவாசிகளை விவாதிக்க வைத்தது.
ஒரு மில்லியன் பேர் கண்ட அந்தக் காணொளியில் அவர் காலையில் குளிக்காமல் இருப்பதால் கூடுதல் நேரம் தூங்கமுடிவதாகச் சொன்னார்.
ரயில்களிலும் பேருந்துகளிலும் குளிக்காமல் செல்வோர் துர்நாற்றத்தை உணர்வதில்லை என்று கூறி, பலர் பகடிப் படங்களையும் (memes) பதிவுகளையும் செய்தனர்.
காலையில் குளிக்காதவர்களும் தங்களுடைய வாதத்தை முன்வைத்தனர்.
'இரவில் வியர்வை ஏற்படுவதில்லை...காலையில் எதற்குக் குளிக்கவேண்டும்? தண்ணீர்தான் வீணாகிறது'
'சாப்பிடுவதற்கு நேரமில்லை...தூங்குவதற்கும் நேரமில்லை...சிறிது நேரம் மிச்சப்படுத்தலாமே' என்று அவர்கள் பதலளித்தனர்.
காலையில் குளிப்பதும், மாலையில் குளிப்பதும் ஒருவரின் விருப்பத்தைப் பொறுத்தது என்று நிபுணர்கள் பெரும்பாலும் கூறுகின்றனர்.
ஆனால் அன்றாடம் குறைந்தது ஒரு முறை குளிப்பதை அவர்கள் பரிந்துரைக்கின்றனர்.