வாழ்வியல் செய்தியில் மட்டும்
கைத்தொலைபேசியைக் காட்டிப் பிள்ளைக்குச் சோறு ஊட்டலாமா?

நிலாவைப் பார்த்துச் சோறூட்டியது அந்தக் காலம்...
கைத்தொலைபேசியில் காணொளிகளைக் காட்டி உணவு ஊட்டுவது இந்தக் காலம்..
திரைகளைப் பார்த்தவாறு சாப்பிடுவது நல்ல பழக்கமா?
இதனால் பிள்ளைகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா?
அதற்கான விடைகளைப் பொது மருத்துவர் டாக்டர் பைசாலிடம் கேட்டறிந்தது 'செய்தி'.
அடிப்படைத் திறன்கள் பாதிப்படையும்
திரையைக் காட்டி உணவு ஊட்டும்போது தொடர்பு குறைகிறது.
பிள்ளையின் கவனமெல்லாம் அந்தக் காணொளியிலேயே இருக்கும்.
அப்படி இருக்கும்போது மற்றவர்களோடு உரையாடும் திறன் பாதிப்படையும் என்றார் டாக்டர் பைசால்.
என்ன சாப்பிடுகிறோம்? உணவு சுவையாக இருக்கிறதா? போதுமான அளவு சாப்பிடுகிறோமா?
இந்தக் கேள்விகளுக்கான விடையை பிள்ளைகள் யோசிக்கமாட்டார்கள் என்றார் டாக்டர் பைசால்.
அது பிள்ளையின் யோசிக்கும் தன்மையைப் பாதிப்பதாக அவர் சொன்னார்.
திரைகளைப் பார்ப்பதால் பிள்ளைகளின் கற்பனைத் திறனும் குறையும்.
வீட்டில் தொடங்கும் பழக்கம் வெளியே சென்றாலும் தொடரும்
வீட்டில் உணவு கொடுக்கும்போது திரைகளைக் காட்டும் பழக்கம் வெளியே சென்றாலும் தொடரும் என்கிறார் மருத்துவர்.
இதை ஆங்கிலத்தில் Spillover effect என்று அழைப்பர்.
பிள்ளைகளை வெளியே விளையாட அழைத்துச் செல்லும்போது சிறிது நேரத்தில் அவர்களுக்கு அந்த நடவடிக்கை சலிப்புத்தட்ட வாய்ப்புள்ளது.
அடுத்து அவர்கள் யோசிப்பது "கைத்தொலைபேசி எங்கே?"
"இந்தக் கால இளையர்கள் நண்பர்களோடு இருக்கும்போது கைத்தொலைபேசியைப் பயன்படுத்துவதைத்தான் அதிகம் பார்க்கிறோம். ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்வதை அவ்வளவாகப் பார்க்க முடிவதில்லை," என்றார் அவர்.
உணவு ஊட்டுவதைச் சுவாரசியமாக்கலாம்
🥞 உணவு ஊட்டுவதைக் கடமையாகப் பார்க்காமல் பிள்ளைகளுடன் நேரத்தைச் செலவழிக்கும் வாய்ப்பாகப் பார்க்கும்படி ஆலோசனை கூறப்பட்டது.
🥞 திரைகளைத் தள்ளிவைத்துப் பிள்ளைகளின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம். அது பிள்ளைகளைப் பேச ஊக்குவிக்கும்.
🥞 பெற்றோரும் பிள்ளைகளின் மனநலனைத் தெரிந்துகொள்ளலாம்.
🥞 உணவின் நிறம், சுவை ஆகியவற்றைப் பற்றியும் பெற்றோர் பிள்ளைகளிடம் உரையாடலாம்.
🥞 பழங்கள், காய்கறிகள் எங்கிருந்து வருகின்றன போன்ற சுவையான தகவல்களைப் பிள்ளைகளுக்குக் கற்பிக்கலாம்.
எந்த வயதினராக இருந்தாலும்...
சாப்பிடும்போது திரையை விலக்கி வைத்து உணவின் மீது கவனம் செலுத்துவதே சிறந்த பழக்கம் என்கிறார் டாக்டர் பைசால்.