கேள்விக்குப் பதில் மட்டுமல்ல - வேலையையும் செய்யும் Muse
படம்: about.fb.com
This audio is generated by an AI tool.
செயற்கை நுண்ணறிவிடம் (AI) ஒரு கேள்வி கேட்டால், அதற்குப் பதில் கிடைக்கும்.
ஆனால், பதில் சொல்வதோடு நிற்காமல், நாம் சொல்லும் வேலைகளையும் செய்து முடித்தால் எப்படி இருக்கும்?
அதற்காக உருவாக்கப்பட்டதுதான் 'மியூஸ்' (Muse) எனும் புதிய AI.
Facebook, Instagram, WhatsApp ஆகியவற்றின் தாய் நிறுவனமான Meta இதனை உருவாக்கியுள்ளது.
மியூஸ் என்னென்ன செய்யும்?
மின்னஞ்சல்களைப் படித்து முக்கியமான தகவல்களைக் கண்டறிவது...
நாட்காட்டியில் நிகழ்ச்சிகளைப் பதிவு செய்வது...
இணையத்தில் பொருள்களைத் தேடுவது...
உணவகத்தில் முன்பதிவு செய்வது போன்ற வேலைகளை மியூஸ் மேற்கொள்ளும்.
மியூஸுக்கெனத் தனியாகக் கணினியும் இணையத்தளங்களைப் பயன்படுத்தும் வசதியும் உள்ளன.
அவற்றின் மூலம் தகவல்களைத் தேடுவது, படிவங்களை நிரப்புவது, ஆவணங்களை உருவாக்குவது போன்ற வேலைகளைச் செய்ய முடியும்.
சிங்கப்பூரில் என்னென்ன சிறப்பு வசதிகள்?
சிங்கப்பூரில் Shopee, Lazada, Grab, Singapore Airlines, Agoda, Klook, Trip.com, ShopBack போன்ற நிறுவனங்களின் சேவைகளுடன் மியூஸை இணைத்துப் பயன்படுத்த முடியும்.
உதாரணத்திற்கு, இணையத்தில் பொருள்களின் விலைகளை ஒப்பிடுவது, உணவு வாங்கத் திட்டமிடுவது, விமானப் பயணங்களையும் தங்குமிடங்களையும் தேடுவது போன்ற வேலைகளுக்கு இது உதவும்.
இந்த வசதிகள் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும்.
செயலி மூடப்பட்டிருந்தாலும் வேலை தொடரும்!
ஒரே நேரத்தில் பல வேலைகளைக் கவனித்துக்கொள்ளும் மியூஸ், செயலி மூடப்பட்டிருந்தாலும் பின்னணியில் தொடர்ந்து இயங்கக்கூடியது.
முக்கியமான தகவல் கிடைத்தாலோ, நமது கவனம் தேவைப்பட்டாலோ அது அறிவிப்பையும் அனுப்பும்.
மேலும் நாம் அடைய விரும்பும் இலக்குகளுக்குத் திட்டமிட்டு, அவற்றின் முன்னேற்றத்தையும் கண்காணிக்க உதவும்.
மியூஸை நம்பலாமா? கட்டுப்பாடு யாரிடம்?
மியூஸ் என்னென்ன வேலைகளைச் செய்கிறது என்பதையும் பயனீட்டாளர்கள் பார்க்கலாம்.
இருப்பினும், மின்னஞ்சல் அனுப்புவது, பொருள்களை வாங்குவது போன்ற முக்கிய நடவடிக்கைகளுக்கு இயல்புநிலையில் பயனீட்டாளரின் ஒப்புதல் தேவைப்படும்.
வெறுமனே கேள்விகளுக்குப் பதில் அளிப்பதற்கு அப்பால், அன்றாட வேலைகளையும் செய்து முடிக்க உதவும் AI முகவராக மியூஸ் உருவாக்கப்பட்டுள்ளது.