ஏமனில் ஆகாயத் தாக்குதல் - 70க்கும் மேற்பட்டோர் மரணம்

படம்: AFP PHOTO / HO / Al-HUTHI GROUP MEDIA OFFICE
சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படை, ஏமன் (Yemen)தடுப்புக்காவல் நிலையத்தில் நடத்திய ஆகாயத் தாக்குதலுக்கு ஐக்கிய நாட்டு நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது.
நேற்று நடத்தப்பட்ட அந்தத் தாக்குதலில், ஆப்பிரிக்காவைச் சேர்ந்த குடியேறிகள் உட்பட 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
தொலைத்தொடர்பு வசதிகளைத் தாக்கியதால், நாடெங்கிலும் இணையச் சேவைகள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக Reuters செய்தி நிறுவனம் தெரிவித்தது.
சாடா (Saada) எனும் நிர்வாக வட்டாரத்தைத் தளமாகக் கொண்ட, சவுதி அரேபியா வழிநடத்தும் கூட்டணியைச் சேர்ந்தோர் அந்தத் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
சாடா வட்டாரம் ஹவுதி (Houthi) கிளர்ச்சிக் குழுவின் பிடியில் உள்ளது.
அதிகரிக்கும் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று ஐக்கிய நாட்டு நிறுவனத் தலைமைச் செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ் (Antonio Guterres) கூறினார்.
ஆகாயத் தாக்குதல் குறித்த விசாரணையை மேற்கொள்ளவும் அவர் அழைப்பு விடுத்தார்.
ஏமனில் அண்மையில் 100க்கும் மேற்பட்டோர் பலியாயினர். அதனைத் தொடர்ந்து நீண்ட நாட்களாக நீடிக்கும் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்ட்டனி பிளிங்கன் (Antony Blinken) கேட்டுக்கொண்டார்.
2015இலிருந்து சவுதி அரேபியா வழிநடத்துக்கும் கூட்டணிகளுக்கும், ஹவுதி கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையே பூசல் தொடர்கிறது.
அதன் விளைவாக 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிள்ளைகள் மாண்டனர் அல்லது காயமுற்றனர்.
மில்லியன்கணக்கானோர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு, பஞ்சத்தால் அவதிப்படுகின்றனர்.