Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம் செய்தியில் மட்டும்

அமெரிக்க அதிபர் தேர்தலின் இறுதிக்கட்டம் - யாருக்கு வெற்றி? அரசியல் கவனிப்பாளர்களின் கருத்துகள்

வாசிப்புநேரம் -
அமெரிக்க அதிபர் தேர்தலின் இறுதிக்கட்டம் நெருங்கிக்கொண்டிருக்கிறது.

ஜனநாயகக் கட்சியின் கமலா ஹாரிஸும் குடியரசுக் கட்சியின் டோனல்ட் டிரம்ப்பும் போட்டிப்போட்டுக்கொண்டு பிரசாரம் நடத்துகின்றனர்.

முடிவுகள் யாருக்குச் சாதகமாக அமையும்? அமெரிக்காவின் எதிர்காலம் அடுத்த சில ஆண்டுகளுக்கு எப்படி இருக்கும்?

சில அரசியல் கவனிப்பாளர்களிடம் பேசியது 'செய்தி'.

வேலையின்மை, பொருளாதார மந்தநிலை, விலைவாசி உயர்வு, சட்டவிரோதக் குடியேற்றம், இஸ்ரேல்-ஹமாஸ் போர் போன்றவை மக்களின் வாக்குகளை நிர்ணயிக்கும் என்று டெக்சஸ் மாநிலத்தைச் சேர்ந்த அரசியல் கவனிப்பாளர் லக்குரெட்டி அழகர்சாமி தெரிவித்தார்.

இவற்றில் எதற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்பதில் ஹாரிஸுக்கும் டிரம்ப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளது என்று அவர் சொன்னார்.

"டெக்சஸில் இதுவரை குடியரசுக் கட்சியைச் சேர்ந்த அதிபர் வேட்பாளருக்குத்தான் பெருமளவில் ஆதரவு கிடைத்திருக்கிறது. தெருவிலும் வீடுகளின் வெளிப்புறத்திலும் குடியரசுக் கட்சியைச் சார்ந்த பதாகைகளைத்தான் அதிகம் காணமுடிகிறது. கருத்துக்கணிப்புகளின்படி, டிரம்ப் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகளே அதிகம்," என்றார் அவர்.

கடந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடனுக்கு வாக்களித்தவர்கள் அவரால் பெருமளவில் பொருளாதார நிலையில் மாற்றத்தைக் கொண்டு வர இயலவில்லை என்றெண்ணி இம்முறை டிரம்ப்புக்கு வாக்களிக்கக்கூடும் என்றும் திரு லக்குரெட்டி சொன்னார்.
வாக்காளர்கள் பொருளாதாரச் சூழலை மட்டும் வைத்துத் தேர்தலை முடிவுசெய்ய விரும்பவில்லை என்று கூறினார் மேரிலந்து மாநிலத்தைச் சேர்ந்த அரசியல் ஆர்வலர் சொர்ணம் சங்கர்.

"எல்லா நிலைகளிலும், பல இனத்தவரிடையே ஆண்களில் கணிசமானோர் டிரம்ப்பை ஆதரிக்கின்றனர். பெண்களில் பெரும்பாலானோர் ஹாரிஸுக்கு ஆதரவளிக்கின்றனர். டிரம்ப்பும் அவரது ஆதரவாளர்கள் பலரும் தொடர்ந்து பெண்களை அவமதிக்கும் கருத்துகளை வெளியிடுகின்றனர். அத்துடன் கருக்கலைப்பு உரிமைக்காக ஹாரிஸ் குரல்கொடுக்கிறார். கருக்கலைப்பு உரிமைகளைப் பற்றி மாநிலங்கள் சொந்தமாக முடிவெடுக்கவேண்டும் என்று டிரம்ப் கூறியிருக்கிறார். இதனால் மேரிலந்து மட்டுமல்ல, வேறு பகுதிகளிலும் ஹாரிஸுக்குப் பெண்களிடையே அதிகச் செல்வாக்குள்ளது," என்று அவர் தெரிவித்தார்.

"இங்கு கமலா ஹாரிஸ் வெற்றிபெறுவது உறுதி. அவர் கலிபோர்னியாவில் பிறந்து வளர்ந்து தேர்தல்களில் வென்ற மண்ணின் மகள் என்பதால் மட்டுமல்ல, அவரது ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளர்கள் இங்கு ஏராளம்," என்று கலிபோர்னியாவின், லாஸ் ஏஞ்சலிஸ் நகரைச் சேர்ந்த அரசியல் நோக்கர் மணி மு. மணிவண்ணன் 'செய்தி'யிடம் தெரிவித்தார்.

இருந்தாலும் வேறு பகுதிகளில் ஒரு பெண்ணுக்கு, அதிலும் வெள்ளையரல்லாத சிறுபான்மைப் பெண்ணுக்கு, வாக்களிக்கத் தயங்குவோரின் எண்ணிக்கை அதிகம் என்றார் அவர்.

தங்கள் வேலைகளை வெளிநாட்டினருக்குப் பறிகொடுத்தால் எதிர்காலம் இருண்டு போகும் என்று கவலைப்படும் ஊழியர்கள், வேட்பாளர் டிரம்ப்பால் மட்டுமே தங்களைக் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை இருக்கும் வரைக்கும் அவரது வெற்றி வாய்ப்பு ஒளிமயமாக இருக்கும் என்றார் திரு மணிவண்ணன்.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் முடிவுகள் ஒட்டுமொத்த மக்களின் வாக்குகள் மூலம் தீர்மானிக்கப்படுவதில்லை.

அதிபர் மன்ற முறையின்கீழ் தனிப்பட்ட மாநிலங்களின் வாக்குகளே தேர்தல் முடிவை நிர்ணயிக்கின்றன.

போட்டியிடும் இரு வேட்பாளர்களுக்குமே ஆதரவு சமநிலையாக உள்ள மாநிலங்கள், Swing States என்றழைக்கப்படுகின்றன.

ஜார்ஜியா, நார்த் கரோலைனா, பென்சில்வேனியா, விஸ்கோன்சின், மிச்சிகன், நெவாடா, அரிஸோனா ஆகிய 7 மாநிலங்கள் முடிவுகளைத் தீர்மானிக்கும் என்று 'செய்தி'யிடம் பேசிய 3 அரசியல் கவனிப்பாளர்களும் தெரிவித்தனர்.
AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்