போட்டியின்போது நீச்சல் குளத்தில் மயங்கிய நீச்சல் வீரர்... காப்பாற்றினார் பயிற்றுவிப்பாளர்

(படம்: Peter Kohalmi / AFP)
நேற்றிரவு (ஜூன் 22) போட்டியின்போது நீச்சல் குளத்தில் மயங்கிய கலைத்திறன் நீச்சல் வீரர் அனிதா அல்வாரேஸை (Anita Alvarez) அமெரிக்கக் குழுவின் பயிற்றுவிப்பாளர் காப்பாற்றியுள்ளார்.
உலக நீர்த்திறன் வெற்றியாளர் போட்டியின் ஒற்றையர் பிரிவு எதேச்சை பாணி இறுதிச்சுற்றின்போது அல்வாரேஸ் நீச்சல் குளத்தில் மயங்கி மூழ்கினார்.
அதைப் பார்த்த ஆண்ட்ரியா ஃபுயெண்டஸ் (Andrea Fuentes) உடனடியாகக் குதித்து அல்வாரேஸைக் காப்பாற்றினார்.
ஃபுயெண்டஸ் நீச்சல் குளத்தின் அடியில் இருந்த அல்வாரேஸை மேற்பரப்பிற்கு இழுத்து வந்தார்.
அல்வாரேஸ் அப்போது மூச்சுவிடவில்லை என்பதால் பயந்துவிட்டதாக ஃபுயெண்டஸ் கூறினார்.
அல்வாரேஸ் மயங்கி மூழ்கியதைப் பார்த்தும் உயிர்காப்பாளர்கள் எதுவும் செய்யவில்லை என்று ஃபுயெண்டஸ் குறைகூறினார்.
25 வயது அல்வாரேஸின் உடல்நலம் சீராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
அவர் ஏற்கனவே சில போட்டிகளின்போது மயங்கி விழுந்துள்ளதாகக் கூறப்பட்டது.
உலக நீர்த்திறன் வெற்றியாளர் போட்டி புடாபெஸ்ட் நகரில் நடைபெறுகிறது.
-AFP