குறிப்பிட்ட துப்பாக்கிகளுக்குத் தடை விதிக்க அனுமதியுங்கள் - அமெரிக்க அதிபர் மீண்டும் கோரிக்கை

(படம்: AFP/Mandel Ngan)
அதிபர் ஜோ பைடன், குறிப்பிட்ட துப்பாக்கிகளுக்குத் தடை விதிக்கும் மசோதாவுக்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்க மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.
கலிபோர்னியா (California) மாநிலத்தில் இரண்டு நாள்களில் 2 முறை துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதை அடுத்து 19 பேர் மாண்டனர்.
சம்பவங்களில் ஆசிய- அமெரிக்கர்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டனர்.
சீனப் புத்தாண்டின்போது தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
சீனப் புத்தாண்டு வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 11 பேரும் 2 பண்ணைகளில் நடத்தப்பட்ட இன்னொரு துப்பாக்கிச் சூட்டில் 7 பேரும் கொல்லப்பட்டனர்.
வரவேற்பு நிகழ்ச்சியில் தாக்குதல் நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் தம்மை சுட்டுக்கொண்டதை அடுத்து மாண்டார்.
பண்ணையில் தாக்குதல்களை நடத்தியவர் அங்குப் பணிபுரிந்தவர் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர்கள் இருவரும் ஆசிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்.
இவ்வேளையில், அமெரிக்காவில் அதிகரித்துவரும் துப்பாக்கி வன்முறைக்கு எதிராக இன்னும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று திரு. பைடன் வலியுறுத்தினார்.
இதற்கு முன்னதாக நடப்பில் இருந்த தடை 2004ஆம் ஆண்டு காலாவதியானது.
ராணுவத்தில் பயன்படுத்தப்படும் துப்பாக்கிகளில் இருக்கும் சில அம்சங்களைக் கொண்ட குறிப்பிட்ட 19 ஆயுதங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.
தானியக்கத் துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் முதலியவை அவற்றில் அடங்கும்.