ஆஸ்திரேலியா: Omicron பரவல் அதிகரிப்புக்கு இடையிலும் பள்ளிகளைத் திறக்கும் நியூ சௌத் வேல்ஸ்

ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தில் ஓமக்ரான் கிருமிப்பரவல் அதிகரித்துள்ளபோதும் பள்ளிகள் திட்டமிட்டதுபோல் திறக்கப்படவுள்ளன.
அது அரசாங்கத்தின் முன்னுரிமை என்று மாநில முதல்வர் டொமினிக் பெரோட்டே (Dominic Perrottet) கூறினார்.
பள்ளிகளை மீண்டும் திறப்பதில் சவால்கள் இருக்கும் என்று தெரிவித்த திரு. பெரோட்டே, அவற்றைத் தொடர்ந்து மூடிவைத்திருக்கத் திட்டமில்லை என்றார்.
பள்ளிகளை மீண்டும் திறக்க அதிகாரிகள் 3 வாரங்களாகப் பணியாற்றி வருகின்றனர்.
பாதுகாப்பான சூழலை உருவாக்க அது நம்பிக்கை அளிக்கும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
கிருமித்தொற்றுச் சம்பவங்கள் கணிசமாய் அதிகரித்தால், தொடக்கத்திலேயே அவற்றைச் சமாளிக்க மாநிலத்தின் சுகாதாரத்துறைக்குப் போதுமான வளம் இருப்பதைத் திரு. பெரோட்டே சுட்டினார்.
பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லும் முன்னர் அவர்களுக்குத் தடுப்பூசி போடுமாறு சுகாதார அதிகாரிகள் பெற்றோரைக் கேட்டுக்கொண்டனர்.
நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தில் COVID-19 கிருமியால் மாண்டோர் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.
அங்கு இன்று புதிதாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
30 பேர் மாண்டுவிட்டனர்.