உலகம் செய்தியில் மட்டும்
வட்டி விகிதம் 14 ஆண்டுகள் காணாத உச்சம்...'பிரிட்டனின் பொருளியல் மந்தநிலையின் விளிம்பில் இருக்கிறது'

(படம்: AP Photo/Kirsty Wigglesworth)
இங்கிலாந்தின் மத்திய வங்கி (Bank of England) இன்று வட்டி விகிதத்தை 2.25 விழுக்காட்டுக்கு அதிகரிப்பதாய் அறிவித்துள்ளது.
ஏற்கனவே அது 1.75% ஆக இருந்தது.
2008ஆம் ஆண்டிற்குப் பின்னர் இடம்பெற்ற மிகப்பெரிய வட்டி விகித அதிகரிப்பு அது.
வட்டி விகித அதிகரிப்பால் கடன் வாங்குவது சிரமமாகும், இதனால் மக்கள் குறைவாகச் செலவழிப்பர். அது விலைகளைத் தணிக்க உதவும் என்பது நம்பிக்கை.
பிரிட்டனில் கட்டுக்கடங்காது அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்ததவும், பணவீக்கத்தைக் குறைக்கவும் இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டதாக வங்கி தெரிவித்துள்ளது.
தற்போது பிரிட்டனின் பணவீக்கம் 9.9% விழுக்காடாக உள்ளது. இது கடந்த 40 ஆண்டுகள் காணாத ஆக மோசமான பணவீக்கம். பிரிட்டனின் பொருளியல் மந்தநிலையின் விளிம்பில் இருக்கிறது என்கிறார் பிரிட்டனில் வசிக்கும் ஊடகவியலாளர் G. S. குமார்.

"உக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்பால் எரிவாயு, எரிபொருட்கள் விலையேற்றம் கண்டன. உலக அளவில் உணவுப் பொருட்களின் விலையும் அதிகரித்தது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகியதும் வட்டி விகிதம் அதிகரிக்கக் காரணம்."
"புதிதாகப் பதவியேற்ற பிரதமரால் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அது எந்தளவுக்கு வெற்றியளிக்கும் என்பது குறித்துப் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.
நாளை பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் இடைக்கால வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. அதைப் பொறுத்து வட்டி விகித அதிகரிப்பின் தாக்கம் அமையும்."
என்றார் திரு குமார்.