ஜப்பானில் பேரங்காடியைச் சேதப்படுத்திய கரடி பிடி

(கோப்புப் படம்: Pixabay)
ஜப்பானின் ஹொன்ஷூ (Honshu) தீவில் இருக்கும் அகிட்டா (Akita) நகரில் பேரங்காடியை இரண்டு நாளாக உலுக்கிய கரடியை அதிகாரிகள் பிடித்துள்ளனர்.
அதிகாரிகள் உணவில் தேனைத் தடவிக் கரடியைக் கடையைவிட்டு வெளியே வரச் செய்தனர்.
ஜப்பானில் கரடிகளால் பிரச்சினைகள் அதிகரித்துவருகின்றன.
கடந்த நிதியாண்டில் கரடிகள் தாக்கி 6 பேர் மாண்டனர். 9,000க்கும் அதிகமான கரடிகள் கொல்லப்பட்டன.
பேரங்காடியில் கரடி ஒன்று 47 வயது ஆடவரைத் தாக்கியதாகக் காவல்துறைக்குச் சனிக்கிழமை (30 நவம்பர்) தகவல் கிடைத்தது.
அதன் விளைவாக ஆடவரின் தலையில் ஏற்பட்ட காயம் குணமடைய குறைந்தது ஒரு வாரம் எடுக்கும் என்று காவல்துறைப் பேச்சாளர் கூறினார்.
இறைச்சி வைக்கப்பட்ட பகுதியை அது சேதப்படுத்தியதாக Asahi Shimbun நாளேடு தெரிவித்தது.
கரடியை மட்டும் உள்ளே விட்டுவிட்டு அனைவரும் பேரங்காடியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இறுதியில் வாழைப்பழம், ஆப்பிள், ரொட்டி, தவிடு இவற்றின் மீது தேனைத் தடவி வைக்கப்பட்ட பொறியில் சிக்கியது கரடி.
பிடிபட்ட கரடி இன்று கொல்லப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.