உலகம் செய்தியில் மட்டும்
'குளிரைச் சமாளிக்க வீட்டில் வெப்பமில்லை... தண்ணீர் உறைந்து குழாய்கள் வெடித்துவிட்டன...'

பனிப்புயலில் சாலை வழியாகப் பயணித்துவரும் வாகனங்கள். படம்: (AFP/ Jewel Samad)
அமெரிக்காவைக் கடுங்குளிரும் பனிப்புயலும் அலைக்கழிக்கின்றன.
இதுவரை கடுங்குளிரால் 48 பேர் மாண்டுவிட்டனர். அந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
பல இடங்களில் மின்சாரம் தடைபட்டுள்ளது. உள்நாட்டு, வெளிநாட்டு விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பலரும் தங்கள் வீடுகளில் வெப்பமின்றி அவதிப்படுவதாக அமெரிக்காவின் பாஸ்டன் (Boston) நகரில் வசிக்கும் செய்தியாசிரியர் பாலா தெரிவித்தார்.
"என் உறவினர் இரண்டு நாள்களுக்கு முன்பே கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக இங்கு வந்திருக்க வேண்டும்."
"பயணம் செய்யவிருந்த விமானம் ரத்து செய்யப்பட்டதால் அவர் புளோரிடாவில் சிக்கிக்கொண்டார். அவரின் வீடு ஹூஸ்டனில் (Houston) உள்ளது. அங்கு மின்சாரம் தடைபட்டதால் குளிரில் தண்ணீர் உறைந்துபோய் குழாய்கள் வெடித்துச் சிதறிவிட்டன."
என்று பாலா கூறினார்.
வீடில்லாதவர்கள், வீடுகளுக்குள் தனியாகச் சிக்கிக்கொண்ட முதியோர் போன்றவர்களுக்கும் பல பிரச்சினைகள் ஏற்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.
பனியில் சிக்கியுள்ளோரை மீட்பதில் அவசரச் சேவைப் பிரிவினர் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.
"நியூயார்க்கின் Buffalo நகரில் மட்டும் சுமார் 4 அடிக்கு மேல் பனிப்பொழிவு. சாலைகளில் கார்கள் ஆங்கங்கே கைவிடப்பட்ட நிலையில் இருக்கின்றன."
காவல்துறையினருக்கும் போர்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளோருக்கும் கூட சாலைகளைச் சரி செய்ய உதவி தேவைப்படுவதாக பாலா குறிப்பிட்டார்.