ஜொகூரில் பாராங் கத்தியுடன் காரை மடக்கிய சிலர்...பின்னர் துப்பாக்கிக் காயங்களுடன் ஒரு சடலம்

மலேசியாவின் ஜொகூர் பாரு நகரின் மருத்துவமனையில் துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் ஒரு சடலம் விடப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
அதற்கும் பெட்ரோல் நிலையத்தில் நடந்த ஒரு துப்பாக்கிச் சூட்டுக்கும் சம்பந்தம் இருக்கிறதா என்பதை அவர்கள் விசாரிக்கின்றனர்.
புதன்கிழமை (2 ஜூலை) பின்னிரவு சுமார் 12.10 மணியளவில் சேக்கண்ட லிங்க் (Second Link) விரைவுச்சாலைக்கு அருகே சம்பவம் நடந்தது.
பெட்ரோல் நிலையத்தில் நிறுத்தப்பட்ட கார் ஒன்றை நால்வர் மடக்கினர்.
பாராங் கத்தி வைத்திருந்த அவர்கள் காரின் சன்னல்களை உடைத்ததாக The Star ஊடகம் சொன்னது.
பதிலுக்குக் காருக்குள் இருந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டதாக அது சொன்னது.
காரை மடக்க முனைந்த அனைவரும் உடனடியாகத் தப்பினர்.மூவர் வாகனங்களில் சென்றனர். எஞ்சிய ஒருவர் தப்பி ஓடினார்.
காவல்துறையினருக்கு ஒரு மணிநேரத்துக்குப் பின் சுல்தானா அமினா மருத்துவமனையிலிருந்து தகவல் வந்தது.
மருத்துவமனையின் வாசலில் இருவர் சடலத்தை விட்டுச் சென்றதாகவும் சடலத்தில் துப்பாக்கிச்சூட்டுக் காயங்கள் இருந்ததாகவும் அதிகாரிகள் கூறினர்.
காரை மடக்க முனைந்தவர்களில் இறந்தவரும் இருந்தாரா என்பது தெரியவில்லை.
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கோலாலம்பூரில் பிடிபட்ட அவர்களிடம் துப்பாக்கி இருந்ததாக The Star தெரிவித்தது.
இந்நிலையில் துப்பாக்கிச் சூடு ஒரு தனிப்பட்ட சம்பவம் என்றும் ஜொகூர் பாதுகாப்பாக உள்ளது என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.