கனடிய சீக்கியத் தலைவரின் மரணத்தில் இந்தியா சம்பந்தப்பட்டுள்ளதா? - குற்றஞ்சாட்டும் கனடா - மறுக்கும் இந்தியா

(படம்: Money SHARMA / AFP)
கனடிய சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் (Hardeep Singh Nijjar) சுட்டுக் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்திய அரசாங்கத்துக்குத் தொடர்பிருக்கலாம் என்று கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) கூறியுள்ளார்.
ஆனால் இந்தியா அதை மறுத்துள்ளது.
இந்த ஆண்டு ஜூன் 18ஆம் தேதி கனடிய மாநிலமான பிரிட்டிஷ் கொலம்பியாவில் (British Columbia) உள்ள சீக்கியக் கோவிலுக்கு வெளியே திரு. நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவருடைய மரணத்துக்கும் இந்திய அரசாங்கத்துக்கும் தொடர்பு இருப்பதைக் கனடிய உளவுத்துறை "நம்பகமான" அளவு அடையாளம் கண்டிருப்பதாகத் திரு. ட்ரூடோ கூறினார்.
புதுடில்லியில் நடந்த G20 மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தபோது அந்த விவகாரம் குறித்துப் பேசியதாகவும் அவர் சொன்னார்.
கனடிய மண்ணில் அந்நாட்டுக் குடிமகனைக் கொல்லும் வெளிநாட்டுத் தலையீடு ஏற்றுக்கொள்ள முடியாதது; அது அரசுரிமை மீறல் என்று திரு. ட்ரூடோ கனடிய நாடாளுமன்றத்தில் கூறினார்.
இந்திய அரசாங்கம் கனடாவில் வன்செயலில் ஈடுபட்டிருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் அபத்தமானவை என்றும் நோக்கமுடையவை என்றும் இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
-AFP