புதுடில்லி பேட்மிண்டன் போட்டிக்கு ‘குரங்கு விரட்டுபவர்கள்’
படம்: Envato Elements
This audio is generated by an AI tool.
உலகின் முன்னணி பேட்மிண்டன் வீரர்கள் இந்தியாவின் புதுடெல்லியில் பொதுவிருதுப் போட்டிக்காகக் கூடும் வேளையில் வித்தியாசமான பணி ஒன்றும் நடந்துகொண்டிருக்கிறது.
நான்கு பேர் கொண்ட ஒரு குழுவின் கவனம் வீரர்கள் மீது இல்லை. திடலைச் சுற்றித் திரியும் குரங்குகள் மீது உள்ளது.
திங்கட்கிழமை இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் (Indira Gandhi Indoor Stadium) உலகப் பொதுவிருதுப் போட்டி தொடங்குகிறது. குரங்குகள் அரங்கிற்குள் நுழைவதைத் தடுக்க நால்வர் குழு பணியமர்த்தப்பட்டுள்ளது.
ஜனவரியில் நடந்த ஒரு போட்டியின்போது பார்வையாளர் பகுதியில் குரங்கு ஒன்று காணப்பட்டது. பறவைகளின் எச்சமும் கூடு ஒன்றிலிருந்து விழுந்த குப்பைகளும் ஆட்டத்தைப் பாதித்தன.
இம்முறை அது மீண்டும் நடக்காமல் இருக்க ஏற்பாட்டாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். ‘குரங்கு விரட்டுபவர்கள்’ லங்கூர் குரங்குகளைப் போல ஒலி எழுப்புகின்றனர். சிறிய குரங்குகளின் இயற்கை எதிரியான லங்கூரின் ஒலியைக் கேட்டதும் அவை விலகிச் செல்கின்றன.
குரங்குகளை விரட்டுவதுடன் தெருநாய்களையும் அரங்கிலிருந்து வெளியேற்றுகின்றனர்.
இந்த ஏற்பாடு இணையத்தில் கேலி செய்யப்பட்டது. இந்திய பேட்மிண்டன் நட்சத்திரம் பி.வி. சிந்து முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவித்தார்.
‘தீர்வைப் பார்த்துச் சிரிக்கலாம்... முயற்சியைப் பாராட்டியே ஆகவேண்டும்’ என்றார் அவர்.
விம்பிள்டனில் (Wimbledon) புறாக்களை விரட்ட ரூஃபஸ் (Rufus) என்ற பருந்து பயன்படுத்தப்படுவதை அவர் சுட்டிக்காட்டினார். ஒவ்வொரு பெரிய விளையாட்டுப் போட்டிக்கும் உள்ளூர் சவால்கள் இருப்பதாக சிந்து கூறினார்.