'மூச்சுவிட முடியவில்லை' - மாணவரை விலங்கிட்ட பிரிட்டிஷ் காவல்துறை மீது கோபம்
JUSTIN TALLIS / AFP
பிரிட்டனில் உயிர்போகும் நிலையில் இருந்த 18 வயது மாணவரைக் காவல்துறை அதிகாரி விலங்கிட்டுள்ளார்.
டிசம்பரில் நடந்த சம்பவத்தின் காணொளிப் பதிவு இப்போது வெளியாகியுள்ளது.
Southampton நகரில் கைகலப்பு ஏற்பட்டதாகக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
18 வயது மாணவர் ஹென்ரி நோவாக்கும் (Henry Nowak) 23 வயது விக்ரம் திக்வாவும் (Vickrum Digwa) கைகலப்பில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
நோவாக் தம்மிடம் இனவாதக் கருத்துகளைக் கூறியதாகவும் தம்மை தக்கியதாகவும் திக்வா அதிகாரிகளிடம் சொன்னார்.
அதை நம்பிய அதிகாரிகள் நோவாக்கைக் கைதுசெய்தனர்.
அதிகாரியின் கேமரா பதிவில் நோவாக் கதறுவதைக் கேட்கமுடிகிறது.
''மூச்சுவிட முடியவில்லை'' என்று அவர் கூறுகிறார்.
தாம் கத்தியால் குத்தப்பட்டதாக மீண்டும் மீண்டும் சொல்கிறார்.
"நீங்கள் கத்தியால் குத்தப்படவில்லை என்று நினைக்கிறேன்," என அதிகாரி பதில் சொல்கிறார்.
அவர் நோவாக்கை விலங்கிட்டார்.
சுயநினைவை இழந்த மாணவர் நோவாக் மாண்டார்.
அவரின் கால்களும் இதயமும் கத்தியால் குத்தப்பட்டதாகப் பின்னர் தெரியவந்தது.
வழக்கு விசாரணையில் திக்வா சொன்னது பொய் என்று நிரூபிக்கப்பட்டது.
அவருக்கு நேற்று முன்தினம் (1 ஜூன்) 21 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் சம்பவத்தை அதிகாரிகள் கையாண்ட விதம் மக்களைக் கொதிப்படையச் செய்தது.
நகரில் பேரணியில் ஈடுபட்ட மக்கள் காவல்துறை அதிகாரிகளைத் தாக்கினர்.
அதிகாரிகளுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் ஷாபனா மஹ்மூத் (Shabana Mahmood) கூறினார்.