சமூக ஊடகத்தில் பிரபலமடைந்துள்ள பூனை!

(படம்: Travis and Sigrid / Facebook)
சமூக ஊடகத்தில் மனிதர்கள்தான் பிரபலமாகவேண்டும் என்பதில்லை.
எத்தனையோ விலங்குகளைப் பார்த்திருக்கிறோம்.
இந்தக் கதையில் வரும் அப்படியொரு விலங்கு பூனை.
சாதாரண பூனையாக வந்து இப்போது பலரைச் சுண்டியிழுக்கிறது சிக்ரிட் என்னும் பூனை.
அதன் உரிமையாளர் டிராவிஸ் நெல்சன் (Travis Nelson).
சைக்கிளில் அது ஒய்யாரமாய் அமர்ந்து வருவதைப் பார்த்து அசந்து போகின்றனர் பலர்.
சிக்ரிட்டுக்குப் பிடித்த பொழுதுபோக்கு இப்படி சைக்கிளில் ஊரைச்சுற்றுவது.
வாரம் மூன்று முறை சைக்கிளில் வெளியே போகவேண்டும்.
கூடைக்குள் உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பது அழகோ அழகு என்கின்றனர் வழியில் செல்வோர்.
சிக்ரிட்டும் நெல்சனும் இணையத்தில் இதனால் பிரபலம் அடைந்துள்ளனர்.
இன்ஸ்டகிராமில் அவர்களுக்கு 100,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள்.
TikTok-ல் 225,000 ரசிகர்கள்!
சில காணொளிகள் 4 மில்லியன் முறைக்குமேல் பார்க்கப்பட்டுள்ளன.
அமெரிக்கரான நெல்சன் தாம் தத்தெடுத்த சிக்ரிட்டை அழைத்துக்கொண்டு ஈராண்டுக்குமுன் லண்டனில் குடியேறினார்.
சமூக ஊடகத்தில் காணொளிகளை வெளியிடுவது விலங்குகள்மீது அவர் கொண்டிருக்கும் அன்பை வெளிப்படுத்துவதற்காக மட்டுமல்ல.
அதில் முக்கியமான செய்தியும் அடங்கியிருக்கிறது.
சைக்கிளோட்ட இன்னும் அதிகமானோர் முன்வரவேண்டும் என்பதுதான் அது.
சுற்றுப்புறம் சுத்தமாக இருக்குமே.
இதுதான் சமூக ஊடகத்தில் சிக்ரிட் பிரபலமான கதை.