புதிய மின்னிலக்க OCI அட்டை - நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியவை
(கோப்புப் படம்: REUTERS/Priyanshu Singh)
This audio is generated by an AI tool.
இந்திய அரசாங்கம் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்காக மின்னியல் வடிவிலான ஒசிஐ (OCI) அடடையை அறிமுகம் செய்துள்ளது.
முன்னதாகப் பயன்படுத்திய ஒசிஐ அட்டைக்குப் பதிலாக இ-ஒசிஐ (e-OCI) எனும் அந்த மின் அட்டை பயணிகளுக்கு நீக்குப்போக்கான பயண அனுபவத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது.
✅ இ-ஒசிஐ அட்டையைப் பெறுவது எப்படி?
ஒசிஐ அட்டை வைத்திருப்போர் ஒசிஐ சேவை இணையத்தளத்திலிருந்து இ-ஒசிஐ அட்டையைத் திறன்பேசிகளில் இலவசமாகப் பதிவிறக்கம் செய்யலாம்.
குடிநுழைவுச் சோதனைகளின்போது இ-ஒசிஐ அட்டையைக் காட்டுவது இனி போதுமானதாக இருக்கும்.
எனினும் புதிய இ-ஒசிஐ அட்டை, ஒசிஐ அட்டைக்கு மாற்று அல்ல என்று இந்திய அரசாங்கம் தெளிவுபடுத்தியது.
மாறாக அடிக்கடி பயணம் செய்வோர் ஒசிஐ அட்டையை எடுத்துச் செல்வதற்குப் பதில் திறன்பேசிகளின் மூலம் இ-ஒசிஐ அட்டையைப் பயன்படுத்தும் எளிய முறையை இந்த மாற்றம் அறிமுகம் செய்கிறது என்று அது சொன்னது.
✅ கடப்பிதழைப் புதுப்பித்தால் இ-ஒசிஐ அட்டையை மீண்டும் பதிவிறக்கம் செய்ய வேண்டுமா?
ஆம், புதிய கடப்பிதழின் விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகு இ-ஒசிஐ அட்டையை மீண்டும் பதிவிறக்கம் செய்யலாம்.
✅ குடும்பத்தில் பலர் இ-ஒசிஐ அட்டையைப் பயன்படுத்தினால் அவற்றை ஒரே மின்னஞ்சல் முகவரியை வைத்துப் பதிவிறக்கம் செய்ய முடியுமா?
ஆம், ஒவ்வொருவரின் இ-ஒசிஐ அட்டைக்கும் ஒரே மின்னஞ்சலைப் பதிவு செய்யலாம். அதன் மூலம் அனைவரின் இ-ஒசிஐ அட்டைகளை ஒரே மின்னஞ்சலைக்கொண்டு பதிவிறக்கம் செய்யலாம்.
✅ ஒசிஐ அட்டைகளைத் தொடர்ந்து பயன்படுத்தலாமா?
ஒசிஐ அட்டையைப் பயன்படுத்த விரும்புவோர் தொடர்ந்து அதனைப் பயணங்களின்போது எடுத்துச் செல்லாம்.
இ-ஒசிஐ அட்டையின் அறிமுகத்தால் ஒசிஐ அட்டைகளின் பயன்பாட்டுக் காலத்தில் (validity) எந்த மாற்றமும் இருக்காது என்றும் கூறப்படுகிறது.
✅ இ-ஒசிஐ அட்டைகளால் பயணிகளுக்கு என்ன பலன்?
🔸ஒசிஐ அட்டையை எடுத்துச் செல்ல மறந்தாலும் இ-ஒசிஐ அட்டையைக் குடிநுழைவுச் சோதனைகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
🔸 ஒசிஐ அட்டை தொலைந்துவிடுமோ என்ற அஞ்ச வேண்டாம்.
🔸குடிநுழைவுச் சோதனைகளை எளிதாக முடிக்க இ-ஒசிஐ அட்டையின் பயன்பாடு உதவும்.