'கோழிப் பாதங்களை உட்கொள்ளுங்கள்' - எகிப்திய அரசாங்கம் ஆலோசனை... பொதுமக்கள் சினம்

(படம்: AFP/Mohd RASFAN)
எகிப்தில் பொருளியல் நெருக்கடி மோசமாகி வருவதால் பலரும் தினசரி உணவுக்கே சிரமப்படுகின்றனர்.
இந்நிலையில் கோழிப் பாதங்களை உட்கொள்ளுமாறு கூறிய அரசாங்கத்தின் ஆலோசனை மக்களிடையே சினத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோழிப் பாதங்கள் புரதச்சத்து நிறைந்தவை என்றாலும் அவை பொதுவாக நாய்களுக்கும் பூனைகளுக்குமே அளிக்கப்படுபவை.
அடிப்படைப் பொருள்களான சமையல் எண்ணெய்கூட பலருக்கும் கிடைக்க எட்டாத ஒன்றாகிவிட்டதாக BBC செய்தி நிறுவனம் கூறியது.
ஒருசில மாதங்களிலேயே சில பொருள்களின் விலைகள் 2 அல்லது 3 மடங்கு அதிகரித்துவிட்டன.
எகிப்து பெரும்பாலும் இறக்குமதி செய்யப்பட்ட உணவைச் சார்ந்திருப்பது அதற்கு ஒரு காரணம் என்றது BBC.
அந்நாட்டின் நாணயம் வலுவிழந்து வருவதால், இறக்குமதி செய்யப்படும் உணவின் விலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
எகிப்தின் சுற்றுப்பயணத் துறையும் கிருமிப்பரவல், ரஷ்யா-உக்ரேன் போர் ஆகியவற்றால் சரிந்துவிட்டது.
அதனால் அதன் பொருளியல் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.