ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பிய வேட்பாளர் தகுதியை உக்ரேன் பெறுமா?

(கோப்புப் படம்: Ukrainian Presidential Press Office via AP)
ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் உறுப்பு நாடு ஆவதற்கு உரிய வேட்பாளர் தகுதியை உக்ரேனுக்கு இன்று வழங்குவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவர்கள் இன்று பின்னேரத்தில் பிரசல்ஸில் (Brussels) சந்திக்கவுள்ளனர்.
தலைவர்கள் சாதகமான முடிவை எட்டுவர் என்று நம்பிக்கையுடன் இருப்பதாக உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) கூறியுள்ளார்.
இருளிலிருந்து ஒளியை நோக்கிச் செல்வதை அது குறிக்கும் என்று அவர் கூறினார்.
உக்ரேனுக்கு ஆதரவளிப்போருக்குத் திரு. ஸெலன்ஸ்கி நன்றி தெரிவித்துக்கொண்டார்.
ஐரோப்பிய ஒன்றியம் கீவுக்குச் சாதகமான முடிவை அறிவித்தால் அது ரஷ்யாவுக்கு ஒரு சக்திவாய்ந்த சமிக்ஞையை அனுப்பும் என்று கருதப்படுகிறது.
ஆனால் உக்ரேன், ஒன்றியத்தில் அதிகாரபூர்வமாகச் சேர நீண்டகாலம் ஆகலாம் என்று ஒன்றிய அதிகாரிகள் கூறுகின்றனர்.
ரஷ்யா உக்ரேனின் ஹார்கீவ் (Kharkiv) நகரில் தாக்குதல்களைக் கடுமையாக்கியிருக்கும் வேளையில் அண்மைத் தகவல் வந்துள்ளது.
தாக்குதல்களில் சிக்கிக் குறைந்தது 20 பேர் மாண்டனர்.
அந்நகரில் மக்களின் வாழ்க்கை வழக்கத்துக்குத் திரும்பிய சில வாரங்களில் மீண்டும் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
உக்ரேனின் கிழக்கு, தெற்குப் பகுதிகளில் நடந்துவரும் கடுமையான சண்டையிலிருந்து தனது துருப்புகளின் கவனத்தைத் திசைதிருப்ப ஹார்கீவ் நகர் குறிவைக்கப்பட்டுள்ளதாகக் கீவ் கூறுகிறது.