விலைவாசி உயர்வு, உணவுப் பாதுகாப்பின்மை....உலகில் பசியால் வாடுவோரின் எண்ணிக்கையைக் கூட்டுகின்றன

(படம்: AP Photo/Ajit Solanki, File)
தெற்காசியாவில் 2021ஆம் ஆண்டில் சுமார் 500 மில்லியன் பேர் அல்லது 10இல் 8க்கும் அதிகமானோர் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருப்பதாக அறிக்கை ஒன்று குறிப்பிடுகிறது. ஒரு பில்லியனுக்கும் அதிகமானோர் உணவுப் பற்றக்குறையால் வாடுகின்றனர்.
உணவுப் பொருள்களின் விலை அதிகரித்து உணவுப் பாதுகாப்பின்மை ஏற்படும்போது அத்தகையச் சூழல் ஏற்படுவதாக உணவு-வேளாண் அமைப்பும் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் மற்ற அமைப்புகளும் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
உலக அளவில் 2014ஆம் ஆண்டில் 21 விழுக்காடாக இருந்த உணவுப் பாதுகாப்பின்மை, 2021ஆம் ஆண்டில் 29 விழுக்காட்டுக்கும் மேல் உயர்ந்தது.
பெரும்பாலானோர் வேலை இழந்து பெரிய சவால்களை எதிர்நோக்க COVID-19 கிருமிப்பரவல் முக்கிய காரணமாக அமைந்தது. உக்ரேன் போரினால் உணவு, எரிசக்தி, உரங்களின் விலை கணிசமாக அதிகரித்தது. இதனால் மில்லியன் கணக்கானோர் உணவின்றி வாடும் நிலை ஏற்பட்டது.
கிருமிப்பரவல் காரணமாக தாய்லந்தில் சுற்றுலாத்துறை, உற்பத்தித் துறை ஆகியவற்றைச் சேர்ந்த பத்தில் ஒருவர் 2019இல் இருந்து 2021ஆம் ஆண்டு வரை ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டார்.
2015இல் இருந்து 2018ஆம் ஆண்டு வரை வறுமை 2.6 விழுக்காடு அதிகரித்ததாகவும் உலக வங்கி கூறுகிறது.
-AP