Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிரான்ஸில் தொடரும் ஆர்ப்பாட்டங்கள் - நகரமன்றக் கட்டடத்தில் தீ

வாசிப்புநேரம் -
பிரான்ஸில் தொடரும் ஆர்ப்பாட்டங்கள் - நகரமன்றக் கட்டடத்தில் தீ

(படம்: PHILIPPE LOPEZ / AFP)

ஃபிரான்ஸின் தென்மேற்குப் பகுதியில் உள்ள போர்டோ (Bordeaux) நகரமன்றக் கட்டடத்துக்குத் தீ வைக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் அங்கு 9வது நாளாகத் தொடர்கின்றன.

பிரான்ஸில் ஓய்வுபெறும் வயதை 62இலிருந்து 64க்கு உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

அதை எதிர்த்து ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளனர்.

தலைநகர் பாரிஸில் 119ஆயிரத்துக்கும் அதிகமானோர் போராடிவருவதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சு குறிப்பிட்டது.

காவல்துறை அதிகாரிகள் கண்ணீர்ப் புகையைக் கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க முற்பட்டனர்.

இதுவரை சுமார் 80 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் குப்பைத் தொட்டிகளுக்கும் குவிந்துகிடக்கும் குப்பைகளுக்கும் தீ மூட்டிவருகின்றனர்.

துப்புரவுத் தொழிலாளர்களும் இரண்டு வாரத்திற்கும் மேல் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளதால் பல்வேறு நகரங்களில் குப்பை பெருமளவில் சேர்ந்துள்ளது.

இந்நிலையில் போர்டோ நகரமன்றக் கட்டடத்தில் தீ மூண்டதற்கு யார் காரணம் என்பது இன்னும் தெரியவில்லை.

தீயணைப்பு அதிகாரிகள் துரிதமாக அந்தத் தீயை அணைத்தனர்.

பாரிஸில் பொதுவாகப் போராட்டங்கள் அமைதியான முறையில் அனுசரிக்கப்பட்டாலும் அவ்வப்போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்