உக்ரேனுக்குக் கூடுதல் ஆதரவளிக்க G7 நாடுகள் உறுதி

(படம்: AP Photo/Sergei Grits)
G7 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர்கள் உக்ரேனுக்குக் கூடுதல் ஆதரவளிக்க உறுதியளித்துள்ளனர்.
அனைத்துலக அளவில் ரஷ்யாவைத் தனிமைப்படுத்தும் முயற்சியில் நாடுகள் தங்களது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக அது கருதப்படுகிறது.
ஜெர்மனியில் நடைபெற்ற G7 அமைப்பின் வருடாந்திரச் சந்திப்பில் உக்ரேன், மால்டோவா (Moldova) ஆகியவற்றின் வெளியுறவு அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.
மேலும் 500 மில்லியன் யூரோ மதிப்புமிக்க ஆதரவை வழங்கவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிநாட்டுக் கொள்கைகளுக்கான தலைவர் ஜோசப் போரெல் (Josep Borrell) கூறியுள்ளார்.
அடுத்த வாரம் ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்ய எண்ணெய்மீது தடைவிதிக்கவும் இணக்கம் எட்டப்படும் என்று நம்பப்படுகிறது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினின் (Vladimir Putin) நிதிக் கட்டமைப்பையும் அவருடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களையும் குறிவைக்கும் வகையில் பிரிட்டன் புதிய தடைகளை அறிவித்துள்ளது.
தடையை எதிர்நோக்கும் தனிநபர்களில் திரு. புட்டினின் முன்னாள் மனைவி, உறவினர்கள் ஆகியோரும் அடங்குவர்.
-Reuters