ரஷ்யா போர் மூலம் மாற்ற முயலும் எல்லைகளை அங்கீகரிக்கமாட்டோம்: G7 நாடுகள்

(படம்: Marcus Brandt / POOL / AFP)
ரஷ்யா போர் மூலம் மாற்ற முயலும் எல்லைகளை ஒருபோதும் அங்கீகரிக்கப் போவதில்லை என்று G7 நாடுகள் கூறியுள்ளன. அதோடு உக்ரேனுக்குத் தொடர்ந்து ஆதரவு தரவும் அவை உறுதியளித்தன.
ஜெர்மனியில் G7 அமைப்பின் வருடாந்திரச் சந்திப்பில் கலந்துகொண்ட வெளியுறவு அமைச்சர்கள் அறிக்கையொன்றில் இவ்வாறு தெரிவித்தனர்.
உக்ரேனில் ரஷ்யா படையெடுத்து மூன்று மாதங்கள் ஆகின்றன. ரஷ்யத் துருப்புகளை கீவ் (Kyiv) நகரை விட்டு முற்றிலும் வெளியேற்ற உக்ரேன் அயராமல் போராடுகிறது.
ரஷ்யா மீது பொருளியல் தடைகளை விரிவுபடுத்தவும், ரஷ்யப் படையெடுப்பை முறியடிப்பதற்குத் தேவையான ஆயுதங்களை உக்ரேனுக்கு வழங்கவும் வெளியுறவு அமைச்சர்கள் உறுதியளித்தனர்.
மேற்கத்திய நாடுகள் உக்ரேனுக்கு பீரங்கி, விமான எதிர்ப்பு ஏவுகணைகள், இதர சக்தி வாய்ந்த பொருள்கள் ஆகியவற்றை வழங்கியுள்ளன. இருப்பினும் மேலும் ஆதரவை கீவ் எதிர்பார்க்கிறது.
போரின் காரணமாக ஏழை நாடுகள் அத்தியாவசியப் பொருள்களின்றி அவதிப்படுவதை G7 வெளியுறவு அமைச்சர்கள் சுட்டினர்.
ரஷ்யாவுக்குத் துணைநிற்பதை பெலரூஸ் (Belarus) நிறுத்திக்கொள்ளவேண்டும் என்றும் அனைத்துலகக் கடப்பாட்டை அது மதித்து நடக்கவேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.
-AFP