அமெரிக்காவிலிருந்து சீனாவிற்குத் திரும்பும் ராட்சதப் பாண்டா

அமெரிக்காவின் மெம்ஃபிஸ் (Memphis) நகரின் விலங்குத் தோட்டத்தில் உள்ள ராட்சதப் பாண்டா மீண்டும் சீனாவுக்குத் திரும்பவுள்ளது.
22 வயது யாயாவின் (Ya Ya) உடல்நலத்தைச் சோதிக்கச் சீனாவிலிருந்து நிபுணர்கள் சிலர் அமெரிக்கா சென்றிருப்பதாக SCMP செய்தி நிறுவனம் கூறியது.
யாயாவும் அதன் துணை லேலேயும் (Le Le) இந்த ஆண்டுத் தொடக்கத்தில் சீனாவுக்குத் திரும்ப இருந்தன.
அவை 20 ஆண்டு ஒப்பந்தத்தில் அமெரிக்காவிற்குக் கொடுக்கப்பட்டிருந்தன.
ஆனால் லே லே சென்ற மாதம் இதய நோயால் மாண்டது.
யாயா ஷங்ஹாய் (Shanghai) நகரத்தில் ஒரு மாதக் காலம் தனிமைப்படுத்தி வைக்கப்படும்.
பிறகு அது பெய்ச்சிங்கிற்கு மாற்றப்படும் என்று SCMP சொன்னது.
ராட்சதப் பாண்டாக்களை வாடகைக்குப் பெற சில நாடுகள் ஆண்டுக்கு ஒரு மில்லியன் டாலர் வரை கட்டணம் செலுத்துவதாகக் கூறப்படுகிறது.
அவற்றுக்குத் தேவையான பராமரிப்பையும் உணவையும் வழங்கக்கூடிய நாடுகளுக்கு மட்டுமே பெரும்பாலும் ராட்சதப் பாண்டாக்கள் வாடகைக்கு வழங்கப்படுகின்றன.