இந்தியாவின் 9 பில்லியன் டாலர் திட்டம் - சுற்றுப்புற ஆர்வலர்கள் அக்கறை
கோப்புப் படம்: Indian Coast Guard/AFP
இந்தியா, அந்தமான் கடலில் உள்ள கிரேட் நிக்கோபார் தீவில் சுமார் 9 பில்லியன் டாலர் செலவில் புதிய நகரை உருவாக்குகிறது.
பெரிய துறைமுகம், விமான நிலையம், சாலைகள் எனப் பல வசதிகள் அங்கு கட்டப்படும்.
வர்த்தகம், சுற்றுலாத் துறை, தேசியத் தற்காப்பு போன்றவற்றை மெருகேற்றத் திட்டம் உதவும் என்று இந்திய அரசாங்கம் கூறுகிறது.
உலகின் ஆகச் சுறுசுறுப்பான கடல்வழிகளில் ஒன்றான மலாக்கா நீரிணை அருகே கிரேட் நிக்கோபார் தீவு அமைந்திருக்கிறது.
இந்தியப் பெருங்கடல் வட்டாரத்தில் கடல், ஆகாயத் தொடர்புகளை மேம்படுத்தவும் இந்த முயற்சி கைகொடுக்கும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
எனினும் அந்தத் தீவில் வசிக்கும் பழங்குடியினருக்கும் இயற்கைச் சூழலுக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்துச் சுற்றுப்புற ஆர்வலர்களும் மனித உரிமைக் குழுவினரும் அக்கறை தெரிவித்துள்ளனர்.
நிக்கோபார் தீவில் பல வனங்களும் பவளப்பாறைகளும் அரிய வகை வனவிலங்குகளும் உள்ளன.
புதிய மேம்பாட்டுத் திட்டத்துக்காகத் தீவின் ஐந்தில் ஒரு பகுதி சீர்செய்யப்படும்.
அதனால் வெளியுலகுடன் தொடர்பில்லாத சுமார் 1,200 உள்ளூர்வாசிகளுக்குச் சிரமம் ஏற்படலாம் என்ற கவலைகள் எழுந்துள்ளன.