சமூக ஊடகங்களில் ஆரோக்கியக் குறிப்புகள் - அப்படியே நம்பலாமா?
சமூக ஊடகங்களில் விதவிதமான ஆரோக்கியக் குறிப்புகள்...
பத்தில் 4 பெரியவர்கள் உடல்நலம் குறித்த தகவல்களைச் சமூக ஊடகங்கள் வழி பெறுவது தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவின் 'பியூ ஆராய்ச்சி மையம்' (Pew Research Center) நடத்திய ஆய்வு இதனைக் காட்டுகிறது.
100,000க்கும் அதிகமானோர் பின்தொடரும் 6,000க்கும் மேற்பட்ட சமூக ஊடகப் பிரபலங்களின் (Influencers) கணக்குகள் ஆராயப்பட்டன.
அதிர்ச்சிகரமான உண்மை.... அவர்களில் பத்தில் 4 பேர் மட்டுமே முறையான மருத்துவப் பின்னணியைக் கொண்டுள்ளனர்.
மற்றவர்கள் தங்களைப் பயிற்றுவிப்பாளர்கள் (Coaches) அல்லது சொந்த அனுபவம் கொண்டவர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.
தவறான தகவல்களில் சிக்காமல் இருக்க என்ன செய்யலாம்?
1. "தகுதி" முக்கியம்!
ஒருவர் தன்னை 'பயிற்றுவிப்பாளர்' (Coach) என்று கூறிக்கொள்வது வெறும் வியாபார உத்தியாக இருக்கலாம். அவர்களின் சமூக ஊடகப் பக்கத்தில் (Bio) முறையான கல்வி, பயிற்சி குறித்த ஆதாரங்கள் உள்ளனவா என்று கவனிக்க வேண்டும்.
2. அதிர்ச்சியூட்டும் தகவல்கள் குறித்து கவனம்
பயத்தையோ ஆச்சரியத்தையோ ஏற்படுத்தும் காணொளிகளைக் கண்டால் நிதானமாக இருங்கள். நல்ல மருத்துவத் தகவல்களைத் தருபவர்கள் பயமுறுத்த மாட்டார்கள்.
3. யாருக்கு லாபம்?
சமூக ஊடகங்களில் தகவல் தருபவர்களில் பலருக்கு அதுவே வாழ்வாதாரம். அவர்கள் ஒரு பொருளைப் பரிந்துரைக்கும்போது அவர்களுக்குப் பணம் கிடைக்கலாம். எனவே, அவர்கள் சொல்லும் தகவல்களைக் கூடுதல் கவனத்துடன் அணுகுங்கள்.
4. ஆதாரங்களைத் தேடுங்கள்
சொல்லப்படும் தகவலுக்குப் பின்னால் நம்பகமான அறிவியல் ஆய்வுகள் உண்டா என்று யோசியுங்கள். ஆதாரங்களைச் சரிபார்ப்பது அவசியம்.
5. சமூக ஊடகப் பக்கத்தைக் கட்டுப்படுத்துங்கள்
உங்களுக்குத் தேவையற்ற தகவல்களைக் காட்டும் காணொளிகளை 'Not Interested' அல்லது 'Hidden Words' கொடுத்துத் தரம் பிரியுங்கள்.
சமூக ஊடகத் தகவல்கள் ஆரம்பக்கட்ட விழிப்புணர்வைத் தரலாம்.
ஆனால் அது மருத்துவரின் பரிந்துரைக்கு ஈடாகாது.
சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகுவதே சிறந்தது என்கிறது ஆய்வு.