Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம் செய்தியில் மட்டும்

முழங்கால் அளவு தண்ணீர்; மின்சாரம் இல்லை...தவிக்கும் சென்னை மக்கள்

வாசிப்புநேரம் -
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள பெஞ்சல் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இன்றிரவு முதல் நாளை காலைக்குள் புதுச்சேரிக்கும் சென்னைக்கும் இடையே இந்தப் புயல் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்போது 70 கிலோமீட்டர் வேகத்துக்குக் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வகம் கூறியது.

நான் தற்போது சென்னைப் புறநகர்ப் பகுதியான கூடுவாஞ்சேரியில் உள்ள மகாலட்சுமி நகரில் இருக்கிறேன்.

இங்கு ஒவ்வோர் ஆண்டும் பருவ மழையின்போது தண்ணீர் தேங்குவது தொடர்கதையாக உள்ளதாக இங்கு வாழும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது இங்கு முழங்கால் அளவுக்குத் தண்ணீர் தேங்கியுள்ளதால் பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரச் சிரமப்படுகின்றனர்.

மழையிலிருந்து வாகனங்களைப் பாதுகாக்கப் பலர் தங்களது வாகனங்களை மேடான பகுதிகளிலும் நண்பர்களின் வீடுகளிலும் நிறுத்தி வைத்துள்ளதாக என்னிடம் கூறினர்.

இன்று காலை ஒன்பது மணியிலிருந்து மின்தடை ஏற்பட்டுள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறும் இந்தப் பகுதி மக்கள், தங்களது தொடர்ப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதேபோன்று, சென்னையின் பல்வேறு முக்கியச் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் வேலைகள் முழுவீச்சில் நடந்துவருகின்றன.

இந்த ஒருநாளைக் கடக்க மக்கள் பெரிதும் சிரமப்படுவதைக் காண முடிகிறது.

புயல் இன்று கரையைக் கடந்ததும் நாளை முதல் மழையின் தாக்கம் படிப்படியாகக் குறையும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்