மகள் தாயாரை இறுதி முறையாகக் காண உதவிய விமான நிறுவனம்
'தாயார் உயிர் வாழ்வதற்கு வெகு நேரம் இல்லை...அவர் எப்போது உயிரிழப்பார் என்று சொல்லமுடியாது..'
என்று மருத்துவர் சொன்னதும் ஹானா ஒயிட்டுக்கு (Hannah White) என்ன செய்வதென்று தெரியவில்லை.
அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்திலிருந்த அவர் நார்த் டகோட்டா (North Dakota) மாநிலத்தில் உள்ள தாயாரைச் சந்திக்க விரைந்தார்.
அவர் விமானச்சீட்டை வாங்க முனைந்தபோது அடுத்த விமானம் மறுநாள்தான் செல்கிறது என்பதை அறிந்தார்.
கடந்து செல்லும் ஒவ்வொரு நிமிடமும் அம்மாவிடமிருந்து பிரிந்திருப்போம் என்றாலும் அவருக்கு வேறு வழியில்லை...
ஒயிட் மறுநாள் விமானத்தில் ஏறினார்.
அந்த விமானத்திலோ கோளாறு...
பயணம் தாமதமடையும் என்று விமானி கூறிவிட்டதாக CNN செய்தி நிறுவனம் சொன்னது.
இப்போது ஒயிட் மினசோட்டா வழியாக (Minnesota) நார்த் டகோட்டாவுக்குச் செல்ல வேண்டும்.
அங்கிருந்து செல்லும் விமானத்தைத் தவறவிட்டு விடக்கூடாது என்பதை அவர் உணர்ந்தார்.
கண்ணில் கண்ணீர் நிரம்ப, ஒயிட் விமானச் சிப்பந்தியிடம் நிலைமையை எடுத்துச் சொன்னார்.
சிப்பந்தி அனுதாபம் சொல்வதுடன் நின்றுவிடவில்லை..அவர் விமானியிடம் ஒயிட்டின் நிலைமையை எடுத்துரைத்தார்.
விமானி ஒயிட்டின் இடைவழிப் பயண விமானத்தின் ஊழியர்களைத் தொடர்புகொண்டார்.
ஒயிட் மினசோட்டாவைச் சென்றடையும் வரை பயணத்தை எப்படியாவது ஒத்திவைக்கமுடியுமா என்று அவர் கேட்டதாக CNN சொன்னது.
அவர்களும் விமானியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டனர்.
ஒயிட் எப்படியோ அதே இரவு நார்த் டகோட்டாவைச் சென்றடைந்தார்.
அம்மா இறப்பதற்கு முன் அவரால் ஒரு நாள் ஒன்றாகக் கழிக்கமுடிந்தது.
"என் அம்மாவுடன் கூடுதல் நேரம் இருக்க உதவி செய்த அவர்களுக்கு நான் எவ்வளவு நன்றிக்கடன்பட்டுள்ளேன் என்று யாருக்கும் புரியாது," என்று ஒயிட் சொன்னார்.