உலகம் trending
மைக்கல் ஜாக்சன் 'மூன்வாக்' - சோகத்தில் முடிந்த சுவாரஸ்யம்
காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்: x/@adamcurtisbroll
பிரபலப் பாடகர் மைக்கல் ஜாக்சன் ( (Michael Jackson) பாடலுக்கு நடனமாடிய மனித இயந்திரம் மேடையில் தடுமாறி விழுந்த காட்சி இணையத்தில் பரவிவருகின்றது.
சீனாவின் ஷென்சென் (Shenzhe) நகரில் 'ஃபியூச்சர் எரா' (Future Era) மனித இயந்திர விற்பனை நிலையத்தில் நடைபெற்ற நேரடி நிகழ்ச்சியில் சம்பவம் நடந்தது.
AGIBOT நிறுவனத்தின் Expedition A3 என்ற அந்த மனித இயந்திரம் மைக்கல் ஜாக்சனின் புகழ்பெற்ற "பில்லி ஜீன்" (Billie Jean) பாடலுக்கு 'மூன்வாக்' (Moonwalk) செய்தது.
மைக்கல் ஜாக்சன் பாணியில் ஒளிரும் வெள்ளை உடையில் அது மேடைக்கு வந்தது.
ஊதா நிறத்தில் ஜொலித்த மேடையில், பாடல் அதிர அது அழகாக ஆடியது.
மேடையிலிருந்த படிக்கட்டில் மோதித் தடுமாறியது.
ஆனாலும் சமாளித்து நடனத்தைத் தொடர்ந்தது.
பிறகு மீண்டும் 'மூன்வாக்' செய்துகொண்டே படிக்கட்டை நோக்கி நடந்த அந்த மனித இயந்திரம் அதில் தடுமாறி விழுந்தது; எழவே இல்லை.
கால்கள் மடங்கி அசைவற்றுக்கிடந்த மனித இயந்திரத்தை ஒருவர் வந்து கையால் தூக்கி பொம்மையைப் போல் இழுத்துச்செல்வதைக் காணொளியில் காண முடிகிறது.
"கீழே விழுந்தால் எழுவதற்கு இதற்குச் சொல்லிக் கொடுக்கவில்லையோ" என்று சிலர் வேடிக்கையாகக் கருத்துப் பதிவிட்டுள்ளனர்.
"இதுதான் உலகை ஆளப்போகும் செயற்கை நுண்ணறிவா?" என்றும் சிலர் கேட்டுள்ளனர்.
அந்த மனித இயந்திரத்தின் எடை 55 கிலோகிராம் என்று கூறப்படுகிறது.