இலவச உணவை உட்கொண்ட 200 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்
AP/Tatan Syuflana
இந்தோனேசியாவின் சுரபயா நகரில் அரசாங்கம் வழங்கிய இலவச உணவை உட்கொண்ட சுமார் 200 மாணவர்களுக்கு நச்சுணவின் அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன.
பாலர்பள்ளி, தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி என 12 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
பெரும்பாலானோருக்கு மயக்கம், வாந்தி ஏற்பட்டது.
சிலருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
மாணவர்கள் நச்சுணவால் பாதிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பள்ளிகள் அனைத்துக்கும் ஒரே நிலையத்திலிருந்து உணவு வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அன்று வழங்கப்பட்ட இறைச்சியில் பிரச்சினை இருக்கலாம் என்று தெம்போக் டுகு சமூகச் சுகாதார நிலையத் தலைவர் கூறினார்.
வழக்கமாக இலவச உணவில் இறைச்சி இடம்பெறாது.
அதைச் சாப்பிட்ட சில மாணவர்களும் சுவை நன்றாக இல்லை என்று கூறினர்.
உணவு மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
உணவைத் தயாரித்த நிலையத்தின் தலைவர் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தோனேசியாவின் இலவச உணவுத் திட்டம் சென்ற ஆண்டு (2025) ஜனவரி மாதம் தொடங்கியது.
90 மில்லியன் பிள்ளைகளுக்கும் கர்ப்பிணிகளுக்கும் உணவளிப்பது திட்டத்தின் நோக்கம்.
ஆனால் திட்டம் தொடங்கியதிலிருந்து ஆயிரக்கணக்கான பிள்ளைகள் நச்சுணவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.