ஈரான் ஹார்முஸ் நீரிணையை மூடினால் என்னவாகும்?

REUTERS/Hamad I Mohammed/File Photo
அமெரிக்கா ஈரானின் அணுச்சக்தித் தளங்களை தாக்கியதன் விளைவாக மத்திய கிழக்கு விவகாரம் பெரிதாகும் அபாயம் எழுந்துள்ளது.
ஈரான் அதற்குப் பதிலடி கொடுக்கப்போவதாய்ச் சூளுரைத்திருக்கிறது.
ஹார்முஸ் (Hormuz) நீரிணையை அது மூடுவதற்கு முடிவெடுக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. அதற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதலும் அளித்துவிட்டது.
அடுத்து ஈரானிய உச்சத் தலைவரின் ஒப்புதலைப் பெறவேண்டும்.
ஹார்முஸ் நீரிணை - அது என்ன?
உலகின் முக்கிய எண்ணெய் வர்த்தகப் பாதைகளில் ஒன்று.
அமெரிக்காவுக்கும் மற்ற பல நாடுகளுக்கும் எண்ணெய் விநியோகம் செய்வதில் அதற்கு முக்கிய பங்குண்டு.
உலகப் பொருளியல் எண்ணெய் விநியோகத்தைப் பெரிதும் நம்பியிருக்கிறது.
நீரிணை ஓமானுக்கும் ஈரானுக்கும் இடையில் உள்ளது.
வடக்கில் ஓமான் வளைகுடாவையும் தெற்கில் அரேபியக் கடலையும் அதைத் தாண்டிய பகுதியையும் இணைக்கிறது.
33 கிலோமீட்டர் அகலம் கொண்ட நீரிணையில் கப்பல் பாதை 3 கிலோமீட்டர் அகலம் கொண்டது.
நீரிணைக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?
உலகின் ஒட்டுமொத்த எண்ணெய் பயன்பாட்டில் ஐந்தில் ஒரு பங்கு இந்த நீரிணை வழியாகச் செல்கிறது.
2022க்கும் சென்ற மாதத்துக்கும் இடையில் சுமார் 17.8 மில்லியன் முதல் 20.8 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய், எரிசக்தி எண்ணெய் ஆகியவை இந்தப் பாதை வழியாகச் சென்றது.
OPEC எனும் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பில் சவுதி அரேபியா, ஈரான், ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், குவைத், ஈராக் ஆகியவை அங்கம் வகிக்கின்றன.
இவை உலகின் பல நாடுகளுக்கு, முக்கியமாக ஆசிய நாடுகளுக்கு நீரிணை வழியாகவே பெரும்பாலான கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்கின்றன.
நீரிணை மூடப்பட்டால் என்னவாகும்?
நீரிணையை மூடினால் எண்ணெய் விலை அதிகரிக்கும். அமெரிக்காவிலும் மற்ற இடங்களிலும் பணவீக்கம் ஏற்படும்; அதன் தாக்கம் உணரப்படும்.
ஈரானியப் பொருளியலையும் அது பாதிக்கும். நீரிணையை மூடினால் வளைகுடா அரபு நாடுகள் ஈரானுக்கு அளிக்கும் ஆதரவு நின்றுபோகும். அவை தங்களைத் தற்காத்துக்கொள்ள ஈரானிடமிருந்து விலகியிருக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.
நீரிணை மூடப்பட்டால் சீனாவுக்கு அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். சீனா ஈரானின் 90 விழுக்காட்டு எண்ணெய் ஏற்றுமதியை வாங்குகிறது.
ஈரான் உலகின் எண்ணெய் தயாரிக்கும் நாடுகளில் 9ஆவது இடத்தில் உள்ளது. நாளொன்றுக்கு 3.3 மில்லியன் பீப்பாய் எண்ணெயைத் தயாரிக்கிறது.
அதில் பாதியை ஏற்றுமதி செய்கிறது. பாதியைச் சொந்தப் பயன்பாட்டுக்கு வைத்துக்கொள்கிறது.