ஆளில்லா வானூர்திகளை இணைந்து தயாரிக்கவிருக்கும் இந்தியா, அமெரிக்கா

(படம்: Pixabay)
அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து ஆளில்லா வானூர்திகளைத் தயாரிக்கவிருக்கின்றன.
விமானங்களிலிருந்து இயக்குவது, ஆளில்லா வானூர்திகளை இடைமறித்துத் தற்காப்பது உள்ளிட்ட சாதனங்கள் தயாரிக்கப்படும் என்று தெரிகிறது.
கட்டுப்படியான விலையில் ஆளில்லா வானூர்திகளை இந்தியா தயாரிக்கும். தெற்கு, தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு அவை ஏற்றுமதி செய்யப்படும் என்று அமெரிக்கத் தற்காப்பு அமைச்சு கூறியது.
சீனாவின் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் சூழலில், ஆளில்லா வானூர்தித் தயாரிப்பு பற்றிய அறிவிப்பு இந்தியாவும், அமெரிக்காவும் மேலும் அணுக்கமாய் இணைந்து செயல்படுவதற்கான அடையாளமாகக் கருதப்படுகிறது.
இந்தியா பெரும்பாலும் ரஷ்யத் தயாரிப்பு ஆயுதங்களையே பயன்படுத்தி வருகிறது. அதற்கு மாற்றாக இந்தியா தனது ஆயுதங்களைப் பலதரப்பிலும் விரிவுபடுத்த முயல்வதாகவும் கணிக்கப்படுகிறது.
இந்தியா அதன் தற்காப்புத்துறையை நவீனப்படுத்துவதில் உதவ அமெரிக்கா ஆர்வமாய் இருப்பதாக இந்தோ-பசிபிக் வட்டாரத் தற்காப்பு விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் இலாய் ராட்னர் (Eli Ratner) கூறினார்.