இந்தோனேசியாவில் அதிரடிச் சோதனை - 321 வெளிநாட்டினர் கைது
Reuters/Dado Ruvic
இந்தோனேசியாவில் இணையச் சூதாட்டக் கும்பலைச் சேர்ந்த 321 வெளிநாட்டினர் கைதாகியுள்ளனர்.
அவர்களில் 228 பேர் வியட்நாமைச் சேர்ந்தவர்கள். 57 பேர் சீன நாட்டவர்.
எஞ்சியோர் லாவோஸ், மியான்மர், தாய்லந்து, மலேசியா, கம்போடியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
ஜக்கர்த்தாவின் 'சைனாடவுன்' பகுதியில் வணிகக் கட்டடத்தில் அவர்கள் பிடிபட்டனர்.
அவர்கள் குறைந்தது 75 இணையதளங்களை இயக்கி வந்துள்ளனர்.
கும்பலுக்குப் பின்னால் இருந்து பண உதவி செய்வோரை அதிகாரிகள் தேடுகின்றனர்.
இந்தக் கும்பல் அடிக்கடி இருப்பிடத்தை மாற்றிக்கொண்டே இருந்ததும் தெரியவந்தது.
கும்பலைச் சேர்ந்த பலர் குறுகிய காலச் சுற்றுலா விசா முடிந்தும் இந்தோனேசியாவில் தங்கியிருந்து வேலை பார்த்துள்ளனர். இதனால் குடிநுழைவு விதிமீறல்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சோதனையில் பல்வேறு நாடுகளின் பண நோட்டுகள், கணினிகள், கைத்தொலைபேசிகள், கடப்பிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
275 பேர் மீது அதிகாரபூர்வமாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 9 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 2 பில்லியன் ரூப்பியா (சுமார் 147,000 வெள்ளி) அபராதமும் விதிக்கப்படலாம்.
கம்போடியாவில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டதால், அங்கிருந்த சூதாட்ட கும்பல்கள் இப்போது இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு மாறத் தொடங்கியிருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது.