ஜப்பானிய விண்வெளி நிலையத்தில் தீ விபத்து

Kyodo News via AP
ஜப்பானில் உள்ள தனேகஷிமா விண்வெளி நிலையத்தில் (Tanegashima Space Center) தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று காலை ஜப்பானிய நேரப்படி 8.30 மணியளவில் விபத்து ஏற்பட்டதாக NHK செய்தி நிறுவனம் தெரிவித்தது. விபத்தில் யாருக்கும் காயமும் ஏற்படவில்லை. எந்தச் சேதமும் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.
Epsilon S எனும் உந்துகணையின் (rocket) சோதனைக்கான தயாரிப்புப் பணிகள் துவங்கிய 30 விநாடியில் பெரிய வெடிப்புச் சத்தம் கேட்டது. அதன் பின் தீப்பற்றிய ஒரு பொருள் கடலில் விழுந்ததாகக் கூறப்பட்டது.
தீ விபத்தால் உந்துகணையின் சோதனை நிறுத்தப்பட்டதாக விண்வெளி நிலையத்தின் பேச்சாளர் சொன்னார்.
இதற்கு முன்பு 2023ஆம் ஆண்டிலும் 2022இலும் தொழில்நுட்பக் கோளாறுகளால் Epsilon வகை உந்துகணைகளின் சோதனை தடைபட்டது.
இன்றைய சோதனை வெற்றிகரமாக நிகழ்ந்திருந்தால், அடுத்த ஆண்டு (2025) மார்ச் மாதத்திற்குள் Epsilon S உந்துகணையை விண்வெளிக்கு அனுப்ப நிலையம் திட்டமிட்டிருந்தது.
விண்வெளித் துறையில் முன்னணி வகிக்கும் அமெரிக்காவின் SpaceX நிறுவனத்திற்கு ஈடுகொடுக்க எண்ணி ஜப்பான் அதன் உந்துகணைகளை உருவாக்கி வருகிறது.