நெருப்புப்பந்தாக வெடித்த விமானம் - 3 மரணம்; 11 பேர் காயம்
அமெரிக்காவின் கெண்ட்டக்கி (Kentucky) மாநிலத்தில் சரக்கு விமானம் விபத்துக்குள்ளானதில் மூவர் மாண்டனர்.
11 பேர் காயமுற்றனர்.
UPS அஞ்சல் சேவை நிறுவனத்தின் விமானம் Louisville Muhammad Ali அனைத்துலக விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சற்றுநேரத்தில் விபத்தில் சிக்கியது.
முதலில் இறக்கைப் பகுதியில் தீ மூண்டது.
விமானம் பின்னர் கீழே விழுந்ததில் வெடித்தது.
அது நெருப்புப்பந்தைப் போல் காணப்பட்டதாகக் கெண்ட்டக்கி (Kentucky)ஆளுநர் அண்டி பெஷியர் (Andy Beshear) சொன்னார்.
விமான நிலையத்துக்கு அருகே உள்ள கட்டடங்களுக்கும் தீ பரவியது.
விமான நிலைய வட்டாரத்தில் புகை சூழ்ந்திருப்பதைப் படங்களில் காணமுடிகிறது.
தீ இன்னும் எரிகிறது. அதை அணைக்க அதிகாரிகள் போராடுகின்றனர்.
விமானம் எப்படி விபத்துக்குள்ளானது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
அதிகாரிகள் தற்போது விசாரணையில் இறங்கியுள்ளனர்.
அஞ்சல் சேவை விமானத்தில் மூவர் இருந்தனர். அவர்கள் அனைவரும் மாண்டதாக நம்பப்படுகிறது.
விமானம் விழுந்த இடத்தில் இருந்தவர்கள் காயமடைந்துள்ளனர்.
காயமுற்றோர் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் விமானநிலையத்தைச் சுற்றியுள்ள வான்வெளி மூடப்பட்டுள்ளது.
அஞ்சல் சேவைகள் தாமதமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.