"கோலாலம்பூர் பாதுகாப்பானதே" - நகர மேயர் உறுதி
CNA/Fadza Ishak
This audio is generated by an AI tool.
கோலாலம்பூர் தொடர்ந்து பாதுகாப்பாகவே உள்ளதாக அந்நகர மேயர் தெரிவித்துள்ளார்.
8 மீட்டர் ஆழம்கொண்ட பாதாளக் குழியில் விழுந்த 48 வயது இந்தியச் சுற்றுப்பயணி திருமதி விஜயலெட்சுமியைத் தேடும்பணி 4ஆவது நாளாகத் தொடர்கிறது.
கோலாலம்பூர் நீண்ட காலமாக மேம்படுத்தப்பட்டு வருவதாக நகர மேயர் மைமுனா முகமது ஷரிப் (Maimunah Mohd Sharif) கூறினார்.
மேம்பாட்டுப் பணிகளுக்கு அந்நகர் பாதுகாப்பானது அல்ல என்ற கூற்றுகளுக்கு வலுவான ஆதாரங்கள் தேவை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அது குறித்து ஆராய சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
பாதாளக் குழி ஏற்பட்ட ஜாலான் மஸ்ஜித் இந்தியாவைச் சுற்றிய பகுதியிலும் கோலாலம்பூரிலும் நிலைமை சீராகவும் பாதுகாப்பாகவும் இருப்பதாக அவர் வலியுறுத்தினார்.
சென்ற வெள்ளிக்கிழமை (23 ஆகஸ்ட்) நேர்ந்த அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து நகரில் எந்நேரமும் பெரிய குழி ஏற்படும் அபாயம் இருப்பதாகச் சமூக ஊடகத்தில் பகிரப்பட்டு வருகிறது.
வெள்ளிக்கிழமை காலை எட்டரை மணியளவில் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் நடைபாதையில் குடும்பத்தோடு நடந்து சென்று கொண்டிருந்த திருமதி விஜயலெட்சுமி திடீர் என்று காலுக்கு அடியில் ஏற்பட்ட பள்ளத்தில் விழுந்து விட்டார்.
அவரை இதுவரை காணவில்லை. அவரைப் பாதாளச் சாக்கடையில் இருந்து மீட்கும்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.